இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









கிறிஸ்து அரசர் பெருவிழா

உண்மையை எடுத்துரைப்பதே என்னுடைய பணி

தானியேல் 7:13-14
திருவெளிப்பாடு 1:5-8
யோவான் 18:33-37

இறை இயேசு கிறிஸ்துவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே இன்று நாம் கிறிஸ்து அரசர் பெருவிழா பெருவிழாவை சிறப்பிக்கின்றோம். அரசர்கள் எல்லோரும் மடிந்து மண்ணுக்குள் சென்று கொண்டிருக்கும் காலம் இது, அரசுகள் எல்லாம் அழிக்கப்பட்டு அரசியல்வாதிகள் ஆளுகின்ற தருணம் இது. இத்தருணத்தில் ஆண்டவர் இயேசுவை இன்றும், என்றும் அரசராக நாம் கொண்டாடுகின்றோம். ஆண்டவர் இயேசு உண்மையிலே அரசர் தான் என்பதற்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் விவிலிய சான்றுகள் நமக்கு நிறைய உள்ளன.

உதாரணமாக, இயேசு, அரசர் தாவீதின் மகன் என்றும், அவருடைய அரியனையை கடவுள் அவருக்கு கொடுப்பார் என்று அவர் பிறப்பதற்கு முன்பே கபிரியேல் வானதூதர் அன்னை மரியாவிடம் இயேசுவை ஓர் அரசராக வெளிப்படுத்துகின்றார். “இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.
இரண்டாவதாக ஆண்டவர் இயேசு பிறந்த பிறகு மத்தேயு 2:1 கீழ்திசை ஞானிகள் ஏரோது அரசனிடம் வந்து “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள். பாலன் இயேசுவை யூதர்களின் அரசராக ஞானிகள் ஆராதிக்கின்றனர்.
மூன்றாவதாக யோவான் 1:49-ல் நாத்தானியேல் இயேசுவைப் பார்த்து “ரபி நீர் இறைமகன்; இஸ்ராயேல் மக்களின் அரசர்” என்கிறார்.
நான்காவதாக ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்து கொடுத்ததை பார்த்த மக்கள் கூட்டம் இயேசுவை கூட்டிக்கொண்டு அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்த இயேசு அவர்களிடமிருந்து தப்பித்து தனியே செல்கின்றார். (யோவா 6:1-15)
ஐந்தாவதாக யோவா 12:13 -ல் ஒலிவ மர கிளைகளை பிடித்துக்கொண்டு 'ஓசன்னா, ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!' என்று சீடர்கள் வெற்றி ஆரவாரத்தோடு இயேசுவை எருசலேமுக்குள் வரவேற்கின்றனர்.
ஆறாவதாக பார்வையிழந்த மனிதன் இயேசுவைப் பார்த்து தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என உரக்க கத்தி நாசரேத்தூர் இயேசு அரசர் என்பதை அவர் வெளிப்படுத்துகின்றார்
ஏழாவதாக யூதமத தலைவர்கள் ஒன்று கூடி பிலாத்துவிடம் வந்து "இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்" என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்துகின்றனர். லூக்காஸ் 23 : 2
எட்டாவதாக யோவான் 18 : 37 பிலாத்து இயேசுவிடம் "அப்படியானால் நீ அரசன்தானோ?" என்று கேட்கிறார். அதற்கு இயேசு, "அரசன் என்று நீர் சொல்கிறீர் என்றார். ஒன்பதாவதாக சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த போது நல்ல கள்ளவன் இயேசுவிடம் ஆண்டவரே நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் என்கிறான்.
பத்தாவதாக ஆண்டவர் கல்வாரியில் உயிர் விட்ட பிறகு பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என்று எழுதியிருந்தது. யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், "'யூதரின் அரசன் ' என்று எழுத வேண்டாம்; மாறாக, "யூதரின் அரசன் நான்" என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும்" என்று கேட்டுக் கொண்டார்கள். யோவான் 19 : 19-21.

ஆக விவிலியத்தில் இயேசுவை தாவீதின் மகனாக, நீதி வழங்கும் அரசாக மக்கள் பார்க்கின்றனர். இன்றும் அதே இயேசுவை நம்முடைய அரசராக நாம் கொண்டாடகின்றோம்.

இந்த அரசரின் பணி என்ன?
பிரியமானவர்களே இயேசு எதற்காக பிறந்தார்?
எதற்காக இவ்வுலகிற்கு வந்தார்?


மத்தேயு 5 : 17 "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
மத்தேயு 10 : 34 ";நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.
மாற்கு 2 : 17 நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.
யோவான் 6 : 38 என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்.
யோவான் 9 : 39 இயேசு "தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்" என்றார்.
யோவான் 12 : 46 என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்.


ஆக யேசு வந்ததன் நோக்கத்தை விவிலியம் நமக்கு தெளிவு படுத்துகின்றது. இன்னும் நாம் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக இன்றைய நற்செய்தியில் “உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்" என்றார். ஆக உண்மையை பேச, உண்மையை எடுத்துரைக்க இயேசு இவ்வுலகிற்கு வந்தார். இந்த இயேசுவை பின்பற்றும் நாம் அனைவரும் உண்மையை அன்றாட வாழ்வில் வாழ்வாக்க கடவுள் நம்மை அழைக்கின்றார். இன்று உண்மைக்காக வாழப்போகின்றோமா? அல்லது பிலாத்துவைப்போல உண்மையா? அது என்ன? என்று பொய்மையில் வாழப்போகின்றோமா?

உண்மை என்பது என்ன?
உ – உண்மை பேசுபவர்கள் உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள்
இந்தியா விடுதலை பெற்றுவிட்டது, சுதந்திர இந்தியாவில் நாம் வாழ்கின்றோம் என்று கூறிக்கொண்டு நம்முடைய உரிமைகளை அன்றாடம் இழந்து வருகின்றோம். ஒருகாலத்தில் வெளிநாட்டுக்காரர்கள் நம்மீது ஆட்சி செலுத்தினர் எனவே நம்முடைய உரிமைகளை இழந்து வாழ்ந்தோம். ஆனால் இன்று நம்மை சார்ந்தவர்களை நாம் தான் தேர்ந்தெடுக்கின்றோம் ஆனாலும் உரிமைகளை இழந்து வாழ்ந்து வருகின்றோம். இன்று மக்களின் கருத்து உரிமை மறுக்கப்படுகின்றது. தங்களது கருத்துக்களை தைரியமாக பேச முடிவதில்லை. அப்படி தங்கள் கருத்துக்களை பேசினால் அவர்கள் அனைவரும் ஆன்டி இந்தியன்கள் என்று முத்திரை குத்தப்படுகின்றது.

பெண்களுக்கான உரிமை இன்றும் பறிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. கடவுளின் பார்வையில் அனைவரும் சமம் என்கிறோம், “ஆணுக்கு பெண் இளைப்பிள்ளை” என்றான் பாரதி, ஆனாலும் இன்றளவிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படவில்லை. குழந்தைகளுக்கான உரிமை மறுக்கப்படுகின்றது. அனைவருக்கும் கல்வி என்ற நிலை மறைந்து பணம் இருந்தால் பட்டயக் கல்வி என்றும் பணம் இல்லாதவர்களுக்கு குலத்தொழிலே கல்வி என்று உரிமை மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றோம்.

நம்முடைய அரசர் ஆண்டவராகிய இயேசு மக்களின் உரிமைகளுக்காக போராடினார். அதற்காக எல்லா துன்பங்களையும் அனுபவித்தார். கடைசியில் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் உயிரை இழந்து கல்வாரியில் தொங்கினார். இன்றும் உரிமைக்கான குரல் சமூதாயத்தின் எல்லா நிலைகளிலும் தேவைப்படுகின்றது. உண்மை பேசும் மனிதர்கள் மட்டுமே உண்மையான உரிமைக்கு குரல் கொடுக்க முடியும்.


உதாரணமாக ஆப்பிரிக்காவில் கருப்பின மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து தன்வாழ்வையே சிறையில் செலவழித்தவர் நெல்சன் மண்டேலா. ஜார்க்கண்ட் மக்களின் உரிமைக்காக போராடி தள்ளாத வயதிலும் தன் உயிரை தியாகம் செய்தவர் அருட்தந்தை. ஸ்டேன் சுவாமி அவர்கள். இந்திய மக்களின் உரிமைக்காக, விடுதலைக்காக ஆங்கிலேயரிடம் போராடி தன் இந்திய மக்களாலே சுட்டுக்கொள்ளப்பட்டவர் மகாத்மா காந்தியடிகள். இப்படியாக உரிமைக்கான குரலை எழுப்பும் போது நிச்சயம் உயிரை இலக்க நேரிடும். ஆனாலும் உரிமைக்கான குரல் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. கிறிஸ்து அரசர் பெருவிழா அதற்கான உரிமை குரலை எழுப்ப நம்மை அழைக்கின்றது.

02. உண் – உ(ன்) உன்னால் தான் முடியும்; உன்னால் மட்டுமே முடியும்.

அன்புக்குரியவர்களே இன்றைய உலகில் 100-க்கு 70 சதவிகிதம் மக்கள் தன்னம்பிக்கையை இழந்து வருகின்றனர். இவர்கள் மீது சுமத்தப்படும் அன்றாட விமர்சனங்கள் இவர்களை தோல்வியை சந்திக்கச் செய்கின்றது. எனவே மாற்றங்களுக்காக பலரும் காத்திருக்கின்றனர். ஆன்மீகவாதிகள் மாற்றத்தை தரமாட்டார்களா? அரசியல் தலைவர்கள் மாற்றத்தை தரமாட்டார்களா? என மாற்றங்களை அடுத்தவரிடம் எதிர்பார்த்து இன்றைய இளைய சமூதாயம் காத்திருக்கின்றது. இன்று மாற்றத்தை அடுத்தவரிடம் எதிர்பார்க்காதீர்கள்; நீங்கள் தான் மற்றத்தை கொண்டுவரவேண்டும் என கடவுள் நம்மை அழைக்கின்றார்.

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். அறிவிப்பு பலகையில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர். அதில் “உங்கள் வளர்ச்சிக்கும், நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார். அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.

இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கும் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது. பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர். சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும், நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.

சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது... “உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம், நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது. உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.

உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால், உங்களது பெற்றோரால், உங்களது ஆசிரியரால் உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது. நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும். உனக்கான தேடலை உன்னால் மட்டுமே கண்டறிய முடியும்… உனக்கான மாற்றத்தை உன்னால் மட்டுமே விதைக்க முடியும்… உன் வாழ்க்கையின் முடிவை உன்னால் மட்டுமே எடுக்க முடியும் உன் பசிக்கான உணவை நீர் தான் தேடி கண்டுபிடிக்க வேண்டும். "உன்னால் முடியும்" "உன்னால் மட்டுமே முடியும்"
ஆம் பிரியமாவர்களே உண்மை பேசக்கூடியவர்கள் மட்டுமே மாற்றத்தை கொண்டுவரமுடியும். காரணம் உண்மை அவர்களை அனைத்து இன்னல்களில் இருந்தும் விடுவிக்கும். கிறிஸ்து அரசர்பெருவிழா அதற்கான அழைப்பைத் தருகின்றது. தன்னம்பிக்கை புதுப்பிக்க உண்மையோடு வாழுவோம். மாற்றத்தை வெளியே எதிர்பார்க்காமல் நம்மிலிருந்தே தொடங்குவோம்.

உண்மை : (மை) நம்பிக்கை

முதலில் கூறியது தன்னம்பிக்கை இரண்டாவதாக வருவது நம்பிக்கை. தன்மீது நம்பிக்கை உள்ளவன் நிச்சயம் தன்னை சுற்றியுள்ளவனையும் நம்புவான். ஆண்டவர் இயேசு தன்னில் நம்பிக்கை கொண்டார்; அதனால் தன்னை சுற்றியுள்ளவர்களையும் நம்பினார். தன்னை மறுதலித்தவரையும், தன்னை காட்டிக் கொடுத்வரையும் இயேசு நம்பினார். தனக்கு எல்லாம் தெரிந்து இருந்தும் தன்னுடைய பகைவர்களையும் தன்னுடைய சீடர்களாக அவர் வைத்துக் கொண்டார். இன்று அப்படிப்பட்ட நம்பிக்கை நம்மில் இருக்கின்றதா? நம்பிக்கை துரோகிகள் எனத் தெரிந்தும் அவர்களோடு உறவு கொண்டாட முடிகின்றதா? உண்மை பேசுபவர்களும், உண்மைக்காக வாழ்பவர்கள் மட்டுமே இத்தகைய நிலையை அடைய முடியும்.
உண்மை பேசுபவர்கள் கடவுளின் அருளை கண்டடைந்தவர்கள். இன்று நாம், உண்மையை பேசினால் நமது பிள்ளைகள் உண்மையை பேசுவார்கள். மாற்றத்தை நம்மில் இருந்து தொடங்குவோம். கிறிஸ்து அரசர் மாற்றத்தை தன்னிலே தொடங்கியவர். அந்த அரசரை பின்பற்றும் நாமும் தன்னம்பிக்கையோடும், கடவுள் மீதும் நம் அயலார் மீதும் நம்பிக்கை கொண்டு உரிமைக்காக போராடி கிறிஸ்துவின் அரசாட்சியை அன்றாடம் வாழ்வாக்குவோம்.

ஏன் பொய் பேசக்கூடாது?

சீராக்கின் ஞானம் 25 : 2-ல் மூன்று வகையான மனிதரை கடவுள் வெறுப்பதாக கூறுகின்றது. அதாவது இறுமாப்புக் கொண்ட ஏழைகள், பொய் சொல்லும் செல்வர், கூடா ஒழுக்கத்தில் ஈடுபடும் அறிவற்ற முதியவர்கள். பொய்பேசுபவர்களை கடவுள் வெறுக்கின்றார். நீதிமொழிகள் 12 : 22 பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்; உண்மையாய் நடக்கின்றவர்களை அவர் அரவணைக்கிறார். சீராக்கின் ஞானம் 20 : 25 பொய் சொல்லும் பழக்கம் கொண்டவரை விடத் திருடன் மேலானவன்; இருவருமே அழிவை உரிமையாக்கிக்கொள்வர். மேலும் பொய் பேசுபவர்களை கடவுள் அழித்துவிடுவார் என திருப்பாடல்கள் 5 : 6 ல் கூறுகின்றது. பொய்சொல்லியதால் ஒருகுடும்பமே அழிந்துபோனதை திருத்தூதர்பணிகள் நமக்கு உணர்த்துகின்றது. (தி.ப 5:1-10)

அனனியா என்னும் பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் தன் மனைவி சப்பிராவுடன் சேர்ந்து தன்னுடைய நிலத்தை விற்றான்; விற்ற தொகையில் ஒரு பகுதியைத் தன் மனைவி அறியத் தனக்கென்று வைத்துக் கொண்டு, மறு பகுதியைத் திருத்தூதரின் காலடியில் கொண்டுவந்து வைத்தான். அப்பொழுது பேதுரு, "அனனியா, நீ நிலத்தை விற்ற தொகையின் ஒரு பகுதியை உனக்கென்று வைத்துக்கொண்டு தூய ஆவியாரிடம் பொய் சொல்லும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன்? அது விற்கப்படுவதற்கு முன்பு உன்னுடையதாகத்தானே இருந்தது? அதை விற்ற பின்பும் அந்தப்பணம் உன்னுடைய உரிமையாகத்தானே இருந்தது? பின்பு ஏன் நீ இச்செயலுக்கு உன் உள்ளத்தில் இடமளித்தாய்? நீ மனிதரிடமல்ல, கடவுளிடமல்லவா பொய் சொன்னாய்" என்று கூறினார். அவர் கூறியதைக் கேட்டதும் அனனியா கீழே விழுந்து உயிர்விட்டான். இதைக் கேள்வியுற்ற அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது. இளைஞர்கள் எழுந்து வந்து அவனைத் துணியால் மூடிச் சுமந்து கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள்.

ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப் பின் அவன் மனைவி உள்ளே வந்தாள்; நிகழ்ந்தது எதுவும் அவளுக்குத் தெரியாது. பேதுரு அவளைப் பார்த்து, "நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள்? சொல்" என்று கேட்க, அவள் "ஆம், இவ்வளவுக்குத்தான் விற்றோம்" என்று பதிலளித்தாள். மீண்டும் பேதுரு அவளைப் பார்த்து, "தூய ஆவியாரைச் சோதிக்க நீங்கள் உடன்பட்டதேன்? இதோ! உன் கணவனை அடக்கம் செய்தவர்கள் கதவருகில் வந்து விட்டார்கள். அவர்கள் உன்னையும் வெளியே சுமந்து செல்வார்கள்" என்றார்.

உடனே அவள் அவர் காலடியில் விழுந்து உயிர்விட்டாள். இளைஞர்கள் உள்ளே வந்து அவள் இறந்துகிடப்பதைக் கண்டு வெளியே சுமந்துகொண்டு போய் அவள் கணவனுக்கு அருகில் அடக்கம் செய்தார்கள். பொய்பேசுபவர்கள் அழிந்து போவார்கள் என நாம் அறிந்து கொள்கின்றோம். இன்று நம்மில் எத்தனை பேர் உண்மையை மறைத்து பொய் பேசுகின்றோம்? உண்மை எனத்தெரிந்தும் உண்மைக்காக குரல் கொடுக்காமல் எத்துனை முறை அமைதி காத்து இருக்கின்றோம்?


சீராக்கின் ஞானம் 4 : 28-ல் இறக்கும்வரை உண்மைக்காகப் போராடு; கடவுளாகிய ஆண்டவர் உனக்காகப் போரிடுவார் என்கிறது. கிறிஸ்து அரசர் பெருவிழாவில் இயேசுவைப் போல உண்மைக்காக வாழப்போகினறோமா? அல்லது ஆளுனன் பிலத்து போன்று உண்மையா அது என்ன? என்று பொய்யுரைத்து பொய்யிலே வாழப்போகின்றோமா?

திருப்பாடல்கள் 52 : 3 நன்மை செய்வதைவிட தீமை செய்வதையே விரும்புகின்றாய்; உண்மை பேசுவதைவிட பொய் பேசுவதையே விரும்புகின்றாய் என திருப்பாடல் ஆசிரியர் கூறுகின்றார். கிறிஸ்து அரசர் பெருவிழாவில் உரிமைக்காக குரல் கொடுக்க, மாற்றத்தை நம்மில் கொண்டுவர, துரோகிகளையும் நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ள, பொய் பேசுவதை நிறுத்தி உண்மையை பேச உண்மைக்காக வாழ முடிவு எடுப்போம்

உண்மை பேசினால் உண்மை உங்களை விடுவிக்கும் பொய் பேசினால் அதுவே உங்களை பாதாளத்துக்கு இட்டுச் செல்லும் என்று உணர்ந்து வாழுவோம். கிறிஸ்து அரசர் நமக்கும் நமது குடும்பத்திற்கும் அரசராக இருந்து செயல்பட வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

அருட்பணி. வேதபோதக சகாய செல்வராஜ், கப்புச்சின் விடிவெள்ளி, கிருஷ்ணகிரி.