இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

உலகத்தின் குப்பைகள்தான் கடவுளுக்குத் தேவை

ஏசாயா 6:1-8
1 கொரிந்தியர் 15:1-11
லூக்கா 5:1-11

இறைஇயேசுவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே! இன்று நாம் பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். கடந்த வாராம் ஏரேமியாவின் அழைப்பை மேற்கோள் காட்டி புறக்கணிக்கப்பட்டவர்களெல்லாம் புண்ணியவான்கள் என்று சிந்தித்தோம். இன்று இவ்வுலகம் குப்பை என கருதுபவற்றையும், இரண்டாவதாக எவர் ஒருவர் தன்னிலை உணர்ந்து தன்னை குப்பையாக உணர்பவரை கடவுள் தேர்ந்துகொள்கின்றார்.

ஏதுவெல்லாம் குப்பை? நாம் வேண்டாம் என்று ஒதுக்கியது, அல்லது எதற்கும் உதவாதது அனைத்தும் குப்பை என கருதப்படுகின்றது.

இன்று மக்கள் யாரும் குப்பைகளை தேர்ந்தெடுப்பது கிடையாது. படித்த, பட்டம் பெற்ற, தகுதியுள்ளவற்றை நாம் தேர்ந்தெடுக்கின்றோம். ஆனால் கடவுளோ இவ்வுலகம் குப்பை என கருதுபவற்றை தேர்ந்தெடுக்கின்றார்.

ஒருமுறை நான் வீடு சந்திக்க சென்றிருந்தேன். அவ்வீட்டில் இருந்த அந்த தாய் சாமி எனக்கு மூன்று பிள்ளைகள். பெரியவன் நன்றாக படிப்பான். அவனை இஞ்ஜினியரிங் படிக்க வைக்கலாம் என்று இருக்கின்றோம்; சின்னவனும் நன்றாக படிப்பான். அவனை மருத்துவராக்கலாம் என இருக்கின்றோம். இந்த நடுவுலவன் எதுக்கும் இலய்க்கு இல்ல, படிப்பும் ஏற மாட்டுது, அவ்வளவு திறமைசாலி இல்ல. எனவே இந்த வருடம் படிப்பு முடித்தவுடன் சாமியாருக்கு இவன கூட்டிட்டு போயிருங்க என்றார். ஆம்பிரியமானவர்களே இன்றும் பல குடும்பங்களில் இப்படிப்பட்ட சிந்தனை மேலோங்கி நிற்கின்றது. அத்தோடு மட்டுமல்லாமல் படிக்கவோ, வேலைக்கோ சென்றால் முதலில் தகுதியை சோதித்த பின்புதான் பள்ளியிலோ, அலுவலகங்களிலோ வேலை கிடைக்கும். மக்கள் அனைவரும் தகுதியை பார்த்து தேர்ந்தெடுக்கும் போது கடவுளோ அவர்களின் தகுதியின்மையை பார்த்து தேர்ந்தெடுக்கின்றார்.இவ்வுலகம் குப்பை, ஒன்றுக்கும் உதவாது என கருதுபவற்றை தேர்ந்துகொள்கின்றார்.

முதல் வாசகத்தில் ஏசாயா இறைவக்கினர் “ஐயோ நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளை கொண்ட மனிதன் நான் என்றும், தூய்மையற்ற மக்கள் நடுவில் வாழ்பவன் நான் என கடவுளுக்கு முன்னிலையில் தன்னையே குப்பையென கருதுகின்றார். கடவுள் குப்பை என கருதிய ஏசாயாவை தேர்ந்தெடுத்து இஸ்ராயேல் மக்களுக்கு இறைவாக்கு உரைக்கும் தங்க கட்டியாக மாற்றி கடவுளின் பணிக்கென அனுப்புகின்றார்.

இரண்டாவது வாசகத்திலே தூய பவுல் தன்னையே சுய ஆய்வு செய்து காலம் தப்பிபிறந்த குழந்தை எனவும், திருத்தூதர்களிடையே மிகக் கடையவன்; திருத்தூதர் என அழைக்கப்பட தகுதியற்றவன் என தன்னையே குப்பையாக கருதுகின்றார். ஆனால் கடவுளோ குப்பை என கருதிய தூய பவுலை தன்னுடைய பணிக்கென தேர்ந்துகொள்கின்றார். நற்செய்தி வாசகத்திலே தூய பேதுரு ஆண்டவரே நான் பாவி நீர் என்னைவிட்டு போய்விடும் என்று தன்னையே குப்பையாக கருதுகின்றார். கடவுள் இவரை தேர்ந்தெடுத்து இன்றுமுதல் நீ மனிதரை பிடிப்பவன் ஆவாய் என தேர்ந்துகொள்கின்றார். தூய பவுல் கூறுவதுபோல கடவுள் தகுதியுள்ளவர்களை அழைப்பது கிடையாது மாறாக தகுதியற்றவர்களை அழைத்து தகுதியுள்ளவராக மாற்றுகின்றார். எனவே கடவுளின் பார்வையில் நீங்களும் நானும் குப்பைகளா? அல்லது தகுதியுள்ளவர்களா?

ஒரு பக்கத்து வீட்ல ஒரு பெரிய மாமரம் இருந்தது. தன்னுடைய வீட்டில் அப்படி இல்லையே என அந்த அம்மாவுக்கு பயங்கர பொறாமை. அதன் வெளிப்பாடாக தன்னுடைய வீட்டில் உள்ள குப்பைகளை எல்லாம் பொறுக்கி பக்கத்துவீட்டு காம்பவுண்ட் உள்ளே கொட்ட ஆரம்பித்தார். இப்படியே ஒரு மாசம் போச்சு. பக்கத்து வீட்டுக்காரன் சண்டைக்கு வருவாங்க என எதிர் பார்த்தார். ஆனா எதுவும் நடக்கல. ஒரு நாள் குப்பைகளை பொருக்கி எதிர்வீட்டு காம்பவுண்டில் கொட்ட முயன்ற போது அங்கு கூடை நிறைய மாம்பழம் இருந்தது. உடனே ஆச்சரியம் மேலோங்க பக்கத்து வீட்டாரிடம் சென்று அம்மா உங்க வீட்ல தினமும் நான் குப்பையை கொட்ட நீங்க என்னடானா எனக்கு கூட நிறைய மாம்பழத்தை கொடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டாங்களாம். அதுக்கு பக்கத்து வீட்டம்மா எங்க வீட்டு மாமரம் சரியாக காய்ப்பது கிடையாது; அப்படியே காய்த்தாலும் புளிப்பு நிறைந்தது. ஆனால் எப்பொழுது நீங்கள் குப்பைகளை கொட்ட ஆரம்பித்தீர்களோ அந்த குப்பையை எடுத்து மரத்திற்கு இட்டேன். இன்று மாம்பழங்கள் எல்லாம் பெரிதாவும், இனிப்பு சுவை மிகுந்தும் காணப்படுகின்றது. எனவே உங்களுக்கு நன்றி கூறும் விதமாக ஒரு கூடைநிறைய மாம்பலங்களை உங்களுக்கு கொடுத்தேன் என்றாராம். பிரியமானவர்களே மாமரத்திற்கு இட்ட குப்பையே சுவைநிறைந்தக கனிகளை கொடுக்கின்றது என்றால் கடவுளிடம் செல்லும் குப்பை இல்லது கடவுள் தேர்ந்துகொள்ளும் குப்பைஆசீர்வாத்தின் கருவியாகவும், தங்க கட்டிகளாகவும் நிச்சயம் மாறும்.

அந்தப் பெற்றோருக்கு மூன்று பிள்ளைகள் அதில் மூத்த மகன் எதற்கும் தகுதி இல்லாதவன் என்றும் கருதப்பட்டு வந்தான். அந்த ஊரிலே இவனை திக்குவாயன் என்று தான் அழைப்பார்கள். ஒரு காலகட்டத்தில் படிப்பில் கவனம் இல்லாமல் எல்லா வகுப்புகளிலும் பெயில் ஆகி நின்றிருந்தான். குறிப்பாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணக்குப் பாடத்தில் 35 மதிப்பெண் பெற முடியாமல் தோல்வி அடைந்து விடுகின்றான். மீண்டும் ஆக அக்டோபர் மாதம் பரீட்சை எழுதுவதற்கு அவனை அனுப்பி வைக்கின்றனர். அக்டோபர் மாதமும் அவன் எழுதிய தேர்வில் 28 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்து விடுகின்றான். இதனால் மனமுடைந்த அந்த பெற்றோர் இவனுக்குப் படிப்பு வராது; எதற்கும் லாயக்கு இல்லாதவன் என்று சொல்லி கொத்தனார் வேலைக்கு அனுப்புகின்றனர். வேலைக்குச் சென்றுகொண்டே படிக்கின்றான். மார்ச் மாதம் மீண்டும் தேர்வு எழுதுகின்றான். அதிலே 33 மதிப்பெண்கள் எடுத்து மீண்டும் தோல்வியடைகின்றான். அந்த கிராமத்தில் உள்ள மற்ற இளைஞர்கள் இவனுக்கு முன்பாக படித்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விடுகின்றனர். எனவே அவனது பெற்றோர் இவனுக்கு படிப்பு வரவில்லை எனவே மாட்டை வாங்கி கொடுத்து விவசாயம் செய்ய வற்புறுத்துகின்றனர். கடைசியாக மீண்டுமாக நான்காவது முறையாக தேர்வு எழுதுகின்றான். அதிலே 38 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைகின்றான்.

எதற்க்கும் உதவாதன், திக்குவாயன், இரசியில்லாதவன் என்றுகூறி இவனது பெற்றோர் , உற்றார் உறவினர் வெறுத்து ஒதுக்கினர். சென்ற இடங்களில் வேலை கிடைக்கவில்லை; எங்கு சென்றாலும் எதற்கும் உதவாதவன் என்று பட்டம் குத்தப்படுகின்றான். இந்த வேலையில் குப்பை என கருதிய இவனை கடவுள் தெரிந்துகொள்கின்றார். கடவுள் தேர்ந்து கொண்ட அந்த நிமிடத்தில் இருந்து இந்த நொடி வரை இவன் ஆசீர்வாதத்தின் கருவியாக விளங்கிக் கொண்டு இருக்கின்றான். அது வேற யாரும் அல்ல உங்கள் முன்பாக இருக்கும் நான்தான். ஆம் பிரியமானவர்களே குப்பை என கருதிய என்னை கடவுள் தேர்ந்துகொண்டு ஆசீர்வாதத்தின் கருவியாக மாற்றிக்கொண்டு இருக்கின்றார். தூய பேதுரு தன்னுடைய பாவ நிலையை உணர்ந்து தன்னை குப்பை என கருதுகின்றார்; எசாயா இறைவாக்கினர் தான் தூய்மையற்ற உதடுகளை கொண்டவன் என்றும்; தூய்மையற்ற மக்கள் நடுவே வாழ்கின்ற மனிதன் என்று சொல்லி தன்னை தாழ்த்துகின்றார். கடவுள் அவரை உயர்த்துகின்றார்.

மோயீசன் தான் திக்குவாயன் என்றும், பேசுவதற்கு தகுதியில்லாதவன் என தன்னையே குப்பையாக கருதினான். ஆனால் கடவுள் அவரை இஸ்ராயேல் மக்களை மீட்கும் தங்க கட்டியாக கடவுள் மாற்றுகின்றார். தூய ஜான் மரிய வியானியை இவ்வுலகம் குப்பை என கருதியது; இவருக்கு படிப்பு வராது என ஓரங்கட்டியது. ஆனால் கடவுள் இவரை தன்னுடைய தங்க கட்டியாக மாற்றுகின்றார். குருக்களுக்கெல்லாம் பாதுகாவலராக இவரை உயர்த்தியுள்ளார்.

எனது சிந்தனைக்கு:
என்னிடத்தில் உள்ள குப்பைகள் எவை?
இந்த உலகம் என்னை தகுதியுள்ளவன் என கருதுகின்றதா அல்லது குப்பை என கருதுகின்றதா?

ஆண்டவர் இயேசு கிறிஸ்து கல்வாரி மலையிலே விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் தொங்கிக் கொண்டிருந்த பொழுது தகுதியற்ற அந்த கள்வன் ஒரே ஒரு வார்த்தையாலே தன்னை தகுதி உள்ளவனாக மாற்றிக் கொள்கிறான். குப்பை என கருதப்பட்டவன் தங்க கட்டியாக கடவுளோடு ஜொலிக்கின்றான். கடவுளுடைய பேரின்பத்தை சுவைக்க ஆரம்பிக்கின்றான். இன்றும் நம்முடைய குடும்பத்திலே, பள்ளிக்கூடங்களிலே, சமூதாயத்திலே, தகுதி உள்ளவர்களை உற்சாகப்படுத்துகின்றோமா? அல்லது குப்பைகள் என கருதுபவர்களை உற்சாகப்படுத்துகின்றோமா? சிந்திப்போம்

கடவுளுக்கு தேவை குப்பைகளே!