இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு

நற்செய்தி - தூதும், தூதுவர்களும்

மீக்கா 5:2-5
எபிரேயர் 10:5-10
லூக்கா 1:39-45

இந்த நாள்களில் இணையதளம், சமூக வலைதளம், தொலைக்காட்சி, பண்பலை, வானொலி, செய்தித்தாள் என எதைத் திறந்தாலும் செய்திகள் குவிந்து கிடக்கின்றன. இச்செய்திகள் நற்செய்தியா? என்றால், பல நேரங்களில் 'இல்லை' என்றே நம் பதில் இருக்கிறது. மேலும், இச்செய்தியைக் கொண்டு வரும் தூதர்களும் நமக்கு விருப்பமானவர்களாக இருப்பதில்லை. ஏனெனில், ஒவ்வொரு தூதரும் தன் செய்திதான் உண்மை எனச் சொல்வதற்கான செய்தி நிறுவனத்தால் விலைபேசப்படுகிறார். ஆக, நம்மைச் சுற்றி கெட்ட செய்திகளும், பொய்களும் அழகாக, பளபளப்பாக வலம் வருகின்றன.

இந்தப் பின்புலத்தில், கிறிஸ்து பிறப்பு நாள் மிக நெருங்கி வந்துவிட்ட நேரத்தில், 'அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்' (காண். லூக் 2:10) என்று வானதூதர் பெருந்திரள் காத்திருக்கும் வேளையில், 'நற்செய்தியின் தூது மற்றும் தூதுவர்கள்' என்ற மையச்சிந்தனையில் இன்றைய இறைவாக்கு வழிபாட்டைக் கொண்டாடுவோம்.

நற்செய்தியாளர் லூக்காவைப் பொறுத்தவரையில் இயேசுவின் பிறப்புச் செய்தியே நற்செய்தியாக இருக்கிறது. இந்த நற்செய்தியை அறிவிப்பதற்கு கடவுள் மிகவும் சாதாரணமான, யாரும் கண்டுகொள்ளாத, தங்களை முதன்மைப்படுத்தாத, எளிய மக்களைத் தேர்ந்துகொள்கிறார். அவர்களையே நற்செய்தியின் தூதுவர்களாகவும் மாற்றுகின்றார்.

எப்படி?

இன்றைய முதல் வாசகம் (காண். மீக் 5:2-5) மிகவும் முக்கியமான மெசியா முன்னறிவிப்புப் பாடத்தைக் கொண்டிருக்கிறது. இறைவாக்கினர் மீக்கா யூதாவாழ் மக்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவருகிறார். தாவீதின் வழிமரபில் வரும் புதிய அரசரே அந்த மெசியா. மீக்கா கிமு 8ஆம் நூற்றாண்டில் இறைவாக்குரைத்தவர். இவரின் சொந்த ஊர் எருசலேமிற்கு அருகில் உள்ள மொரேஷெத் என்ற ஊர். இவர் நிறைப் பேரின் கண்களில் புகையாய் இருந்தவர். எருசலேமிற்கு வெளியிலிருந்து வந்ததால் எருசலேமை மையமாகக் கொண்டிருந்த யூதத் தலைவர்களின் செருப்புகளுக்குள் சிக்கிய சிறுகல்லாய் அவர்களுக்கு நெருடலாகவே இருந்தார்.

இன்று நாம் வாசிக்கும் முதல் வாசகம், மீக்கா நூலின் 'தலைமைத்துவப் பிரச்சினை' என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'அரசன் உன்னிடத்தில் இல்லாமல் போனானோ?' (மீக் 4:5) என்ற கேள்வியோடு தொடங்குகிறார் இறைவாக்கினர். இதன் வரலாற்றுப் பின்புலம் பாபிலோனிய அடிமைத்தனம் என்று தெரிந்தாலும், இதன் பின்புலம் அவ்வளவு தெளிவாக இல்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயமாக இருந்தது. யூதாவின் ஆட்சியாளர்கள் ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கையை மறந்து, அவருடைய கட்டளைகளை மீறி, வேற்று தெய்வங்களை வணங்கினர். இவர்களின் இந்தப் பாவச் செயல் எல்லா மக்களையும் பாதித்தது. ஆள்பவர்களின் பாவங்களுக்காக ஆளப்பட்டவர்களும் துன்பப்பட்டார்கள். இந்தப் பின்புலத்தில் புதிய அரசனின் வருகையை முன்மொழிகிறார் மீக்கா. இந்தப் புதிய அரசரைப் பற்றிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இவர் எருசலேமிலிருந்து வரமாட்டார். மாறாக, எருசலேமிற்கு வெளியே இருந்து வருவார். எருசலேமிலிருந்து இதுவரை வந்தவர்கள் எல்லாம் மக்களை அடிமைப்படுத்தவும், தங்களைத் தாங்களே வளர்த்தெடுப்பதிலும் கவனமாக இருந்தனர். மெசியாவை எருசலேமிற்கு வெளியே பிறக்க வைப்பதால் மீக்கா மெசியா இறைவாக்கையே தலைகீழாக்குகின்றார்: 'எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.' மேலும், மெசியாவின் முதன்மையான பணியாக மீக்கா முன்வைப்பது: 'அவர் தம் மந்தையை மேய்ப்பார்.' இதுவரை இருந்த எருசலேம் மைய அரசர்கள் மந்தையை 'மேய்ந்தார்களே' அன்றி, மந்தையை 'மேய்க்கவில்லை.' தொடர்ந்து, மெசியாவின் ஆட்சியின் அடையாளமாக 'அமைதியை' மீக்கா முன்வைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தை மொத்தமாகப் பார்த்தால், இங்கே பேசுபொருளாக இருப்பவர்கள் இருவர்: இங்கே பேசுபொருளாக இருப்பவர்கள் இருவர்: ஒன்று, அரசன், இரண்டு, மக்கள். 'சிறிய இடத்திலிருந்து பெரிய அரசன் எழுவான்' - 'மக்கள் தங்கள் நாடு திரும்புவார்கள்' - 'அரசன் தன் மந்தையை ஆயரென மேய்ப்பார்' - 'மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்' - 'அரசனே அமைதி. ஆக, 'அரசன்-மக்கள்-அரசன்-மக்கள்-அரசன்' என்று ஸ்பைரல் படிக்கட்டு போல தன் பாடத்தை எழுதியிருக்கிறார் மீக்கா.

நாம் இன்று வாசிக்கும் இந்த இறைவாக்குப் பகுதியைத்தான், ஞானியர் ஏரோதிடம் சென்று, 'யூதரின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' (காண். மத் 2:2) என்று கேட்டபோது, மறைநூல் அறிஞர்கள் ஏரோதிடம் வாசித்துக் காட்டுகின்றனர். ஆக, மீக்கா சுட்டிக்காட்டும் தூர நாட்டு, ஊழி ஊழிக்கால அரசரை இயேசு எனக் கண்டுகொண்ட பெருமை மத்தேயு நற்செய்தியாளரையே சாரும்.

ஆக, மீக்கா நற்செய்தியை மெசியாவின் பிறப்பு என்னும் தூதாகக் கொண்டு வந்து, மெசியாவின் பிறப்பு கொண்டுவரும் தலைகீழ் மாற்றத்தின் தூதுவராகின்றார். இதுவரை கண்டுகொள்ளப்படாதது இனி கண்டுகொள்ளப்படும் என்பதும், அனைத்தும் இனி ஆண்டவர் பெயரால் செயல்படும் என்பதும் மீக்கா தரும் ஆறுதலின் நற்செய்தியாக இருக்கின்றது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 10:5-10), எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக உருவகித்து, அவர் அனைத்துப் பலிகளையும் விட சிறப்பான பலியைச் செலுத்தினார் என்று மொழியும் பகுதியில், 'இயேசு மனித உடல் ஏற்ற நிகழ்வை' இங்கே பதிவு செய்கின்றார். இயேசுவின் மனுவுடல் ஏற்றல் இங்கே நற்செய்தியாக அறிவிக்கப்படுகிறது. 'உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்' என்பது மட்டுமே இயேசுவின் அடிநாதமாக இருக்கின்றது. இதுவே இயேசுவை நற்செய்தியாக மாற்றுகிறது. நற்செய்தியின் தூதுவராக வந்த அவர் இறைத்திருவுளத்திற்குப் பணிந்திருப்பதையே மீட்பின் கருவியாக மாற்றினார்.

பலிகள் மற்றும் எரிபலிகள் பற்றிய புரிதல் முதல் ஏற்பாட்டில் 'அடையாளம்' என்று தொடங்கி, 'அபத்தம்' என்று கடந்து போவதாக இருக்கிறது. அதாவது, லேவியர் நூல் மற்றும் இணைச்சட்ட நூலில் சொல்லப்படும் பலிகள் மற்றும் அதற்கான முறைமைகள், இறைவாக்கினர்களின் காலத்திற்கு வரும்போது தலைகீழாக மாறுகிறது. சீனாய் மலையில் 'பலிகள்' பற்றி விளக்கம் தரும் இறைவன், பிற்காலத்தில் 'உங்கள் பலிகளா நான் விரும்புபவை?' என்று சாடுகின்றார். பலிகளைப் பற்றிக்கொண்ட மக்கள் இறைவனையும், அயலாரையும் கண்டுகொள்ளாததே இந்த இறையியல் மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம். இத்திருமடல் எழுதப்பட்ட காலத்தில் எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டிருக்கலாம். இருந்தாலும், பலி செலுத்துதல் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்தது. இயேசுவின் உடல் ஏற்றலின் சிறப்பு என்னவென்றால், அவரின் இந்த ஏற்பு மானிடரின் அனைத்து தரகுகள் மற்றும் பிரதிநிதிகளை அழிக்கின்றது.

ஆக, ஒரு பக்கம் இயேசுவின் மனுவுரு ஏற்றலை எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் நற்செய்தியாக அறிவித்தாலும், இன்னொரு பக்கம் இயேசுவே நற்செய்தியாக, இறைத்திருவுளம் நிறைவேற்றுவதையே நற்செய்தியின் தூதுரையாக, தூதுரைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 1:39-45) மரியா எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வைப் பதிவுசெய்கிறது. இவ்விரண்டு தாய்மார்களும் ஒருவர் மற்றவருக்கான நற்செய்தியின் தூதுவர்களாக மாறுகின்றனர். இந்த நிகழ்வு நடைபெறும் இடம் மலைநாட்டில் இருக்கும் ஒரு வீடு. பங்கேற்போர் இரண்டு பெண்களும், அவர்களின் வயிற்றில் இருக்கும் இரண்டு குழந்தைகளும். ஓடி வந்த பெண்ணின் வயது 14லிருந்து 18க்குள் இருக்கும். தங்கியிருந்த பெண்ணின் வயது 60க்கு மேல் இருக்கும். ஒரு சிக்ஸ்டீனும், ஒரு சிக்ஸ்டியும் சந்திக்கும் நிகழ்வு என்றும் சொல்லலாம். ஒருவர் மட்டுமே பேசுகின்றார். மற்றவர் அப்படியே மலைபோல மௌனம் காக்கிறார். எலிசபெத்தை அதிக வால்யூமில் வைத்து, மரியாவை ம்யூட் ஆக்கிவிட்டார் நற்செய்தியாளர்.

கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை சொல்லி முடித்து மறைந்தவுடன், வீட்டைப் பூட்டியும், பூட்டாமலும் விட்டு, தன் உறவினர் எலிசபெத்தை தேடி ஓடுகிறார் மரியா. வானதூதர் சொன்ன 'எலிசபெத்து' அறிகுறி சரியா என்று பார்க்க ஓடினாரா? அல்லது தான் பெற்ற மகிழ்வை தன் உறவினரோடு பகிர்ந்து கொள்ள ஓடினாரா? அல்லது கருத்தாங்கியிருக்கும் அந்த முதிர்கன்னிக்கு கைத்தாங்கலாக இருக்க ஓடினாரா? 'எழுந்தாள். ஓடினாள். நுழைந்தாள். கட்டிப்பிடித்தாள்' - என இரண்டு வசனங்களுக்குள் மரியாளின் நீண்ட பயணத்தை அடக்கி விடுகிறார் லூக்கா. ஒருவர் தன் கையால் அடுத்தவரின் முழங்கையைப் பிடிப்பதுதான் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வாழ்த்துமுறை. மரியாள் என்ன வாழ்த்தினார் என்று குறிப்பிடப்படவில்லை. மரியாவின் பேச்சும் பதிவு செய்யப்படவில்லை. வானதூதரின் நிகழ்வில் வாய்விட்டு பேசிய மரியா எலிசபெத்தோடு ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஆனால் பின் நீண்ட பாடல் ஒன்று பாடுகின்றார். நம் வீட்டிற்குள் நம் நண்பர் வந்தால் அவருடைய பெயர் அல்லது அவரின் அன்புப் பெயரைச் சொல்லிக் கொண்டு ஓடுவோம். ஆனால், வானதூதரும் முதலில் மரியாளின் பெயரைச் சொல்லவில்லை. எலிசபெத்தும் சொல்லவில்லை. வானதூதர், 'அருள்மிகப்பெற்றவரே' என்கிறார். எலிசபெத்து, 'பெண்களுக்குள் புகழப்பெற்றவர்' என்கிறார். இந்த இரண்டுமே காரணப்பெயர்கள்தாம்.

'குழந்தை துள்ளியது'. விவிலிய ஆசிரியர் கதைகளைப் பதிவு செய்யும்போது தனக்கு எல்லாம் தெரிந்ததுபோல எழுதுவர். அதற்கு ஒரு உதாரணம்தான் இது. லூக்கா மருத்துவராக இருந்ததால், கர்ப்பம் தரித்த பெண்களில் நிகழும் உடல் மாற்றங்கள் அவருக்குத் தெரியும். ஆக, இயல்பாக நடந்திருக்கும் ஒன்றை தானே வயிற்றுக்குள் சென்று பார்த்ததுபோல இங்கே பதிவு செய்கின்றார். முதலில் லூக்கா இதைச் சொல்ல, பின் எலிசபெத்தும் தன் வயிற்றில் குழந்தை துள்ளியதாகக் குறிப்பிடுகின்றார். 'என் ஆண்டவரின் தாய்' - மரியாளின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை பற்றி இப்போது எலிசபெத்துக்கு தெரிவதுபோல எழுதுகிறார் லூக்கா. மரியாளுக்கு வழங்கப்படும் பெயர்களில் எனக்கு மிக அதிகமாக பிடித்த பெயர் இதுதான். இந்த தலைப்பில் ஆண்டவருக்கும் தனக்குமான நெருக்கமான உறவை மிக அதிகமாக பதிவு செய்கின்றார் எலிசபெத்து. முதலில் 'ஆசி பெற்றவர்' என அழைத்தவர், இப்போது 'பேறுபெற்றவர்' என அழைக்கின்றார். இங்கே மரியாவின் நம்பிக்கைக்கு மணிமகுடம் சூட்டுகின்றார் எலிசபெத்து.

மரியாள் எலிசபெத்தை சந்திக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? வாசகருக்கு வானதூதரின் வாக்கு பொய்யோ என்ற சந்தேகம் வந்திருக்கும். முதலில் சக்கரியா பற்றி பதிவு செய்யும் லூக்கா, தொடர்ந்து மரியா, பின் எலிசபெத்து என ஒவ்வொரு கட்டமாக காட்சிகளை நகர்த்துகின்றார். மேலும், மரியாவை மூன்று மாதங்கள் எலிசபெத்தின் வீட்டில் தங்கச் செய்கின்றார். ஏற்கனவே இப்போது ஆறு மாதம். இன்னும் மூன்று மாதங்கள். ஆக, மரியாள் வீட்டை விட்டு நீங்கும்போது, எலிசபெத்துக்கு பேறுகாலம் வரும். மூன்று மாதங்கள் உடனிருந்த மரியாள் பேறுகாலத்திலும் உடனிருந்திருக்கலாமே? எதற்காக மரியாவை வெளியேற்றுகிறார் லூக்கா? மரியா அங்கே இருந்தால், திருமுழுக்கு யோவானின் பிறப்பும், அதன் முக்கியத்துவமும் தெரியாமல் போய்விடும். பிறந்திருக்கும் யோவான் மெசியாவா, அல்லது கருவிலிருக்கும் இயேசு மெசியாவா என்ற குழப்பம் வரும். அந்தக் குழப்பத்தை மிக இன்டலிஜென்ட்டாகத் தவிர்க்கின்றார் லூக்கா. மரியாளும், எலிசபெத்தும் ஒருவருக்கொருவர் சாட்சிகளாக இருக்கின்றனர்.

ஆக, மரியாளும் எலிசபெத்தும் ஒருவரை ஒருவர் சந்திக்கும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பகிரும், ஒருவரேடு ஒருவர் மகிழ்வைப் பகிரும் நற்செய்தியின் தூதுவர்களாக மாறுகின்றனர்.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் நற்செய்தி என்பது மெசியாவின் எளிய பின்புலத்தின் வருகையையும், அவர் தரும் அமைதியையும், இரண்டாம் வாசகத்தில் நற்செய்தி என்பது இறைத்திருவுளம் நிறைவேற்ற இயேசு மனுவுடல் ஏற்றதையும் அல்லது மனுவுடல் ஏற்றலே அவரின் இறைத்திருவுளம் நிறைவேற்றுதலாக இருந்ததையும், மூன்றாம் வாசகத்தில் நற்செய்தி என்பது கருவில் இருக்கும் ஒரு குழந்தை இறைப் பிரசன்னத்தை உணர்ந்து துள்ளிக் குதிக்க, அந்தத் துள்ளலில் துள்ளிய இரண்டு பெண்மணிகளின் மகிழ்வில் இருந்ததையும் பார்க்கிறோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் சவால் என்ன?

'கெட்ட செய்திகள் நல்ல செய்திகளைவிட மிக வேகமாகப் பயணம் செய்கின்றன' என்று சொல்லப்படுவது உண்டு. இன்றைய உலகின் நல்லவை மற்றும் நல்லவர்களை அனைத்தையும் மறைப்பது போல இன்று கெட்டவை மற்றும் கெட்டவர்கள் பற்றிய செய்திகளே அதிகம் பேசப்படுகின்றன. 'எவ்வளவு எடுத்தாலும் போதாது' என்று ஊழல் செய்து, தன்னலம், அநீதி, கண்டுகொள்ளாத்தன்மை மேலோங்கியிருக்கும் அரசுகள் மற்றும் ஆட்சியாளர்கள் பற்றிய செய்திகள் நமக்கு கோபத்தை உருவாக்கினாலும், அந்தக் கோபம் நம் கையறுநிலையில் அடங்கிவிடுகிறது. இயற்கைச் சீற்றம், பேரழிவு போன்ற செய்திகள் நம் கடவுள் நம்பிக்கையைக் குலைக்கின்றன. மனிதர்களால் மனிதர்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வன்முறை, கொலை, கொள்ளை பற்றிய செய்திகள் நம்மில் பயத்தை உண்டாக்குகின்றன. நம் மொபைல் இன்பாக்ஸ் எழுப்பும் 'டிங்' சப்தம், இமெயில் எழுப்பும் சப்தம் என நிறைய சப்தங்கள் நமக்கு நெருக்கமானவர்களிடமிருந்து வரும் செய்திகளை நமக்கு அறிவிக்கின்றன.

இவை எல்லாம் செய்திகளா? கெட்ட செய்திகளா? நற்செய்திகளா?

இவ்வளவு கெட்ட செய்திகளுக்கு நடுவில் நற்செய்தி சாத்தியமா? - என்றால், சாத்தியமே. எப்படி?

இதற்கான விடை இன்றைய பதிலுரைப் பாடலில் (திபா 80) இருக்கின்றது. 'நாட்டின் புதுவாழ்வுக்காக' மன்றாடும் ஆசிரியர், 'உமது வலக்கை நட்டுவைத்த கிளையைக் காத்தருளும்!' என வேண்டுதல் செய்து, 'இனி நாங்கள் உம்மை விட்டு அகலமாட்டோம்' என வாக்குறுதி தருகிறார். இறைவனின் அருள்கரம் செயலாற்றும் அனைத்தும் நற்செய்தியே. அவரின் அருள்கரத்தால் தொடப்பட்டவர்கள் அனைவருமே நற்செய்தியின் தூதுவர்களே. 'நற்செய்தி என்பது திறக்கப்பட்ட வாசனைத் திரவியம் போன்றது. அதை அதிமாக நாம் பகிரப் பகிர அது நம் கைகளுக்கும் நறுமணம் தரும்' என்பது ஆப்பிரிக்கப் பழமொழி. தான் பெற்ற இறைவாக்கை மெசியா பற்றிய நற்செய்தியாக பகர்கிறார் மீக்கா. தன் உடலையே நற்செய்தியாக இறைத்திருவுளத்திற்கு கையளிக்கிறார் இயேசு. தன் மகிழ்வைப் பகிர தன் உறவினர் இல்லம் நோக்கி ஓடுகிறார் மரியா. அவரைக் கட்டியணைத்து வாழ்த்துகிறார் எலிசபெத்து. அவரின் வயிற்றிலிருந்த குட்டிக் குழந்தை அக்களிக்கிறது. இவை அனைத்திலும் இறைவனின் கரம் இருந்தது. அவரின் கரத்திலிருந்து வரும் நறுமணத் தைலம் நம் கைகளையும், நாம் தொடும் கைகளையும் மணக்கச் செய்கிறது.