உயிர்ப்புக் காலம் ஐந்தாம் ஞாயிறுபந்தி பரிமாறுவது முறையல்ல!திருத்தூதர் பணிகள் 6:1-7 1 பேதுரு 2:4-9 யோவான் 14:1-12 இயேசு தம் இறுதி இராவுணவில் சீடர்களின் பாதங்களைக் கழுவியபின் அவர்களோடு நீண்ட உரை ஆற்றுகின்றார். உரையின் நகர அவர்கள் பேசும் கருத்துக்கள் நம்மால் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கின்றன. அவர்கள் அருந்திய மதுவின் விளைவாக இருக்கலாம் என்று சிலர் கேலி செய்வதுண்டு. இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 14:1-12) இயேசு, 'என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லை எனில் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன் என்று சொல்லியிருப்பேனா?' என்கிறார். சீடர்கள் நினைத்திருப்பார்கள்: 'இந்த ஆளு மனுமகனுக்கு தலைசாய்க்கவும் இடமில்லை என்று சொல்லி சுற்றிக் கொண்டு திரிகிறார். இவர் எப்படி உறைவிடம் ஏற்பாடு செய்வார்?' ஆகையால்தான், 'நான் போகுமிடத்திற்கு வழி தெரியும்' என அவர் சொல்ல, தோமா, 'அப்பனே! நீ போற இடமே தெரியாது. அப்பறம் எப்டி வழி தெரியும்?' எனக் கேட்கிறார். அடுத்து பிலிப்பின் கேள்வி.
இப்படி எல்லாமே நம் எண்ணங்களைக் கடந்தவை பற்றியும், இறப்புக்குப் பின் நடப்பது பற்றியும் பேசுகிறார். இறப்புக்கு முன்னால நாம வாழுற வாழ்க்கையவே நம்மால புரிஞ்சுக்க முடியல. நம்ம வாழ்க்கை வாழை இலையில ஊத்துன இரசம் மாதிரி இங்கிட்டும் அங்கிட்டும் ஓடிட்டு இருக்கு. இலையும் கிழியாம, சட்டையிலயும் படாம, மேசையிலயும் சிந்தாம நாம சாப்பிட்டே ஆக வேண்டிய கட்டாயம். ஆக, அதுக்கு ஏதாவது வழி இருக்குமா என்று பார்ப்போம்.
நிற்க.
இன்றைய முதல் வாசகம் (காண். திப 6:1-6) எனக்குப் பிடித்தமான வாசகப் பகுதிகளில் ஒன்று.
தொடக்கக் கிறிஸ்தவர்கள் வாழ்வு பற்றி வாசிக்கும்போதெல்லாம், 'அவர்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். தேவையில் இருந்தவர்கள் யாருமில்லை. எல்லாம் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது' என ரொம்ப ரொமான்டிக்காகவே வாசிக்கின்றோம். ஆனால், தொடக்கக் கிறிஸ்தவர்களின் தேனிலவு முடிந்தது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது.
அமைதியான குளமாக இருந்த அவர்களுடைய வாழ்வின் நடுவில் கூழாங்கல் ஒன்று வந்து விழுகிறது. யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை. முதல் முதலாக குழுமத்தில் குழப்பம் வருகிறது. சீடர்கள் எண்ணிக்கை பெருகியதால் பிரச்சினையும் பெரிதாக ஆரம்பிக்கிறது:
'கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.'
இதுதான் பிரச்சினை.
இந்தப் பிரச்சினையில் மூன்று கூறுகள் இருக்கின்றன:
(அ) உணவு பரிமாறப்படுவதில் பாரபட்சம். நம் இல்லங்களில் நடக்கும் திருமணம் மற்றும் நல்ல நிகழ்வுகளில் பந்தியில்தான் நிறையப் பிரச்சினைகள் வருவதுண்டு. குடும்பத்திலும் உணவு எல்லாருக்கும் கிடைத்துவிட்டால், நல்ல உணவை மனைவி சமைத்துவிட்டால் அங்கே பிரச்சினை இல்லை. அது போலவே, அருள்பணியாளர் மற்றும் துறவற இல்லங்களில் வருகின்ற முதல் பிரச்சினை சாப்பாட்டில்தான் இருக்கும்.
(ஆ) மொழிப் பிரச்சினை. இந்த நிகழ்வு எருசலேமில் நடக்கிறது. எருசலேமில் இருந்தவர்கள் பெரும்பாலும் யூதர்கள்தாம். ஆக, பந்தியில் உணவுண்டவர்கள் அனைவரும் யூதர்கள்தாம். அப்புறம் எப்படி மொழிப் பிரச்சினை? சில யூதர்கள் கிரேக்க மொழி பேசும் நாடுகளில் குடியேறியதால் எபிரேயத்தை மறந்து கிரேக்கம் பேசினர். எபிரேய மொழி பேசுவோர் தங்களையே மேன்மையானவர்கள் என நினைத்து கிரேக்க மொழி பேசுவோரைத் தாழ்வாக நடத்துகின்றனர்.
(இ) முணுமுணுத்தல். ஏன் முணுமுணுத்தல்? பிரச்சினையை சொல்வதற்கு எங்கெல்லாம் வடிகால் இல்லையோ அங்கெல்லாம் மக்கள் முணுமுணுப்பார்கள். எடுத்துக்காட்டாக, சாப்பாடு சரியாக வேகவில்லை என்றால் யாரிடம் சொல்ல வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்தால் நாம் அவரிடம் சென்று முறையிடலாம். யாரிடம் போவது என்று தெரியாத பட்சத்தில் நாம் முணுமுணுக்கத்தான் வேண்டும். இன்றைய கால கட்டத்தில், கொரோனாவால் மக்கள் உணவின்றி தவிக்கின்ற நேரத்தில் தமிழக அரசு மதுக்கடைகளைத் திறக்கிறது. இதை யாரிடம் சென்று முறையிடுவது? யாரிடுடமும் முறையிட முடியாது. ஆக, நாம் நமக்குள் முணுமுணுக்கிறோம்.
இந்தப் பிரச்சினையைப் பற்றிக் கேள்விப்படுகின்ற திருத்தூதர்கள் உடனடியாக அதற்குத் தீர்வுகாண முயல்கின்றார்கள். இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியது. ஆண்கள் என்றால் எதையும் பொறுத்துக்கொள்வார்கள். பெண்கள், அதுவும் கைம்பெண்கள். ஆக, ஊரெல்லாம் போய் சொல்லிவிட்டு வந்துவிடுவார்கள். பவுல், கைம்பெண்களை அடிக்கடி வாயாடிகள் என்று சொல்கிறார் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்வோம்.
முதலில், திருத்தூதர்கள் தங்களையே ஆய்வு செய்து பார்க்கின்றனர். எங்கே தவறு நடந்தது? என்று யோசிக்கின்றனர். அப்போதுதான் அவர்கள் தங்கள் முதன்மைகளில் கோட்டை விட்டதை எண்ணிப் பார்க்கின்றனர்:
'நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டு பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறையல்ல!'
ஞானமிகு வார்த்தைகள் இவை.
நான் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் வேறொன்றைச் செய்து கொண்டிருக்கின்றேனே என எண்ணிப் பார்க்கிறார்கள்.
இது எப்படின்னா?
இசைஞானி இளையராஜா தன்னுடைய பாடல்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல், தன்னுடைய கச்சேரிக்கு டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி!
பாடல்களை பாடுவதை விட்டுவிட்டு டிக்கெட் விற்பது முறையல்ல!
எங்களுக்கு இந்த ஆண்டு தியானம் கொடுத்த அருள்பணியாளர் இதே வாசகப் பகுதியை வைத்து வரிசையாகச் சொல்லிக்கொண்டே சென்றார்:
'கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டு பள்ளிக்கூடம் நடத்துவது முறையல்ல!' (ஆனால், அவர் சார்ந்த துறவற சபைக்கு நிறைய பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும், பல்கலைக்கழகமும் இருப்பது வேறு. அதைப்பற்றி எல்லாம் நாம் பேசக்கூடாது!)
'கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டு வழக்கறிஞராக இருப்பது முறையல்ல!'
'கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்வது முறையல்ல!'
'கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டு மதுக்கடையில் மதுபானம் வாங்குவதும் அருந்துவதும் முறையல்ல!'
'கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டு அன்றாடம் தூங்கி தூங்கி சோம்பியிருப்பது முறையல்ல!'
இப்படி நிறையச் சொல்லலாம்!
இன்று நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்: என்னுடைய முதன்மைகளை நான் சரியாக வரையறுத்துள்ளேனா? என் முதன்மைகளைச் சரி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, திருத்தூதர்கள் தங்கள் பணிகளைப் பகிர்ந்து கொள்ள முன்வருகின்றனர். இது அவர்களின் பரந்த உள்ளத்திற்கான சான்று. எல்லாவற்றையும் நானே செய்வேன் என்று நினைக்காமல், மிகவும் எதார்த்தமாக, அடுத்தவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கின்றனர். இது ஒரு சிறந்த தலைமைத்துவப் பண்பு:
'உங்களிடமிருந்து நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவியின் வல்லமையும் ஞானமும் கொண்டவர்களுமான எழுவரைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் நாம் இந்தப் பணியில் நியமிப்போம்.'
ஆக, பணியாளர்கள் மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு இரண்டு தகுதிகள் இருக்க வேண்டும்: (அ) நற்சான்று பெற்றவர்கள் - மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்க வேண்டும், நாலு பேரைத் தெரிந்திருக்க வேண்டும், நாலு பேரு வாழ்க்கையில ஏதாவது நல்லது செய்திருக்க வேண்டும். (ஆ) ஆவியின் வல்லமையும் ஞானமும் பெற்றிருக்க வேண்டும் - கடவுளோடு உள்ள உறவிலும் நன்றாக இருக்க வேண்டும்.
இன்றைய அருள்பணியாளர்களும் இந்த இரண்டு நிலைத் தகுதிகளைப் பெற்றிருத்தல் அவசியம். மக்களின் உறவைப் பிடித்துக்கொண்டு இறை உறவைக் கைவிடுவதும், இறைஉறவைப் பிடித்துக் கொண்டு மக்கள் உறவைக் கைவிடுதலும் ஆபத்தே.
மூன்றாவதாக, திருத்தூதர்கள் தங்களுடைய பணியை மறுவரையறை செய்கின்றனர்:
'நாங்களோ இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும் நிலைத்திருப்போம்'
இங்கே, 'நிலைத்திருப்போம்' என்ற வார்த்தை முக்கியமானது. அதாவது, விடாமுயற்சியுடன் ஒன்றைப் பற்றிக்கொள்ளுதல். இன்னைக்கு ஒன்னு, நாளைக்கு இன்னொன்னு என்று தங்களுடைய பணியின் போக்கை மாற்றிக் கொண்டே இராமல், 'இதுதான்! இது ஒன்றுதான்!' என்று நிலைத்திருத்தல்.
நான்காவதாக, தங்கள் கைகளை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்மேல் வைத்து இறைவனிடம் வேண்டுகின்றனர்.
அவ்வளவுதான். பிரச்சினை தீர்ந்தாயிற்று.
எந்த ஒரு பேப்பர் ஒர்க்கும் இல்லாமல், எந்த ஒரு மீட்டிங்கும் இல்லாமல், எந்த ஒரு அவைக்குறிப்பும் இல்லாமல் இனிதே நடந்தேறுகிறது கூட்டம். தீர்வு கண்டாயிற்று.
இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடம் என்ன?
பிரச்சினைகள் தயிர் போல. உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும். நாளை, நாளை என்று தள்ளிப்போட்டால் புளித்துவிடும். அப்புறம் ஒன்றும் செய்ய முடியாது. இதை நன்றாக அறிந்திருக்கிறார்கள் திருத்தூதர்கள்.
இந்த நிகழ்வு திருத்தூதர்கள் வாழ்விலும், தொடக்கத் திருஅவை வாழ்விலும் ஒரு சறுக்கலாக அல்லது, ஒரு சிறிய இறப்பாக இருந்திருக்க வேண்டும். இருந்தாலும் புத்துயிர் பெற்று எழுகிறார்கள். ஏனெனில் அவர்கள், இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 பேது 2:4-9), அவர்கள், 'தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தார், அவரது உரிமைச் சொத்தான மக்கள்.'
நம் வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் நம்முடைய தற்காலிக இறப்புக்களே. இவற்றை நாம் எப்படி எதிர்கொள்வது?
கடந்த வாரம், 'இகின்ஸி ஸான்ஸ்' ('இரண்டாம் வாய்ப்பு') என்னும் துருக்கிய மொழித் திரைப்படம் ஒன்று பார்த்தேன். அந்தப் படத்தின் தொடக்கத்தில், கதாநாயகனின் வாய்ஸ்ஓவர் இப்படி இருக்கும்:
'இன்றுதான் ... இன்றுதான் நான் என்னையே கொன்றேன்!
மீண்டும் பிறப்பது சில நேரங்களில் நமக்கு அவசியம்!
இந்த இறப்பு என்னை மோட்சத்திற்குக் கொண்டு போகுமா அல்லது நரகத்திற்குக் கொண்டுபோகுமா?
தெரியவில்லை!
ஆனால், இதுவரை நான் உணராத ஓர் அமைதியை இன்று நான் என்னுள் உணர்கிறேன்.
ஆழமான அமைதி!'
தொடக்கத் திருஅவை தன்னில் எழுந்த விருந்துப் பிரச்சினையால் இறந்து மீண்டும் உயிர் பெற்றது.
பிரச்சினைகள் தீர்ந்ததால் ஆழமான அமைதி வந்தது.
இதையே திருப்பாடல் ஆசிரியர்,
'ஆண்டவரின் பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது' (காண். திபா 33:5) எனப் பாடுகிறார்.
|