இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு

ஏற்புடையவராய்!

சீராக் 35:12-14, 16-18
2 திமொ 4:6-8, 16-18
லூக் 18:9-1

கடந்த வாரம் நாம் வாசித்த 'நேர்மையற்ற நடுவனும் கைம்பெண்ணும்' என்ற எடுத்துக்காட்டிற்கு இயேசு ஒரு முன்னுரை கொடுத்ததுபோல இன்றைய நற்செய்திய வாசகத்திற்கும் ஒரு முன்னுரை கொடுக்கின்றார்: 'தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு கூறிய உவமை.' இதற்கு முந்தைய உவமையிலும் இரண்டு கதைமாந்தர்கள் (நேர்மையற்ற நடுவன் - கைம்பெண்). இன்றைய உவமையிலும் இரண்டு கதைமாந்தர்கள் (பரிசேயர் - வரிதண்டுபவர்). முந்தைய கதைமாந்தர்கள் வீட்டில் சந்தித்துக் கொண்டனர். இன்றைய கதைமாந்தர்கள் கோவிலில் நின்றுகொண்டிருக்கின்றனர்.

இயேசுவின் சமகாலத்துச் சமுதாயத்தில் பரிசேயர்கள் அவர்களின் தவமுயற்சிகளுக்காக அதிகமாக பாராட்டப்பெற்றவர்கள். கோவிலுக்கு வரும் பரிசேயர் கடவுளின் முன்னிலையில் நிற்கின்றார். 'நின்றுகொண்டு பேசுவது' என்பது மரியாதையைக் குறிக்கிறது. நின்றதோடு மட்டுமல்லாமல் இறைவேண்டல் செய்கின்றார் பரிசேயர். அவரின் இறைவேண்டல் மூன்று சொற்றொடர்களாக இருக்கின்றது:

அ. நான் அவன்-அவள்-அது போல் இல்லாததற்காக நன்றி கூறுகின்றேன்.

ஆ. வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன்.

இ. என் வருவாயில் பத்தில் ஒரு பங்கைக் கொடுக்கிறேன்.

பரிசேயர் சொல்லும் நன்றி எதிர்மறையாகவும், ஒப்பீடு நிறைந்ததாகவும் இருக்கிறது. அதாவது, மற்றவர்களுக்கு எதிர்மறையான உருவத்தைக் கொடுத்து தான் நேர்முகமாக ஒளிர நினைப்பது. அதாவது, நான் வெள்ளை என்று காட்டுவதற்கு அடுத்தவர்களை கறுப்பாக்கிவிடுவது. 'கொள்ளையர் போலவும், நேர்மையற்றோர், விபச்சாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ, இந்த வரிதண்டுபவரைப் போலவோ' என சொல்கின்றார். 'கொள்ளையர்' என்பவர் 'அடுத்தவருடையவதும் தன்னுடையது' என நினைப்பவர்கள். 'நேர்மையற்றோர்' என்பவர் 'இரண்டு அளவுகோல்களை வைத்திருப்பவர்'. 'விபச்சாரர்' என்பவர் 'பிரமாணிக்கம் தவறுபவர்கள்.' 'வரிதண்டுபவர்கள்' என்பவர் 'மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்.' 'நான் அவர்களைப் போல இல்லாததற்காக நன்றி சொல்கிறேன்' என்று பரிசேயர் சொல்வது அந்த மனிதர்களைவிட தான் மேன்மையானவர் என்றும், இந்த மேன்மையான நிலையை தானே தன் நற்செயல்களால் சம்பாதித்துக் கொண்டதாகவும் பெருமைப்பட்டுக்கொள்கின்றார். தனக்குப் பின்னால் நிற்கும் வரிதண்டுபவரையும் அவர் பார்க்கின்றார் என்றால், அவரின் செபம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவே இருந்திருக்கிறது. 'என்னை மற்றவர்கள் பார்க்கிறார்களா? அடுத்தவர்கள் என்னை எப்படிப் பார்க்கிறார்கள்?' என்ற நிலையில்தான் அவரின் மனநிலை இருக்கின்றது.

இதே நேரத்தில் கோவிலுக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் வரிதண்டுபவர் கடவுளை ஏறெடுக்கவும் துணியாமல், 'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்!' என்கின்றார். இரண்டாம் கதைமாந்தரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்புகிறார் என முடிக்கின்றார் இயேசு.

அதாவது, நான் மற்ற மனிதர்களுக்கு ஏற்புடையவராக இருப்பதை விட, கடவுளுக்கு ஏற்புடையவராக இருக்கின்றேனா என்பதுதான் உவமை முன் வைக்கும் கேள்வி.

மனிதர்களுக்கு முன் ஏற்புடையவராக நற்செயல்கள் நிறையச் செய்ய அவசியம்.

ஆனால், கடவுள்முன் ஏற்புடையவராக ஒருவர் தன்னையே அறிந்தால் போதுமானது. தன்னையே அறிந்து கொண்ட ஒருவர், தன்னறிவு என்னும் ஞானம் பெற்ற ஒருவர் எந்நேரமும் தன் மதிப்பீடுகளிலும், நற்செயல்களிலும் பெருமை கொள்ள மாட்டார். மாறாக, தன்னையும், தன் இருப்பையும் கடவுளின் கொடை என்றே உணர்வார்.

ஆக, ஒருவர் நேர்மையாளர் என்பது அவரின் நற்செயல்களில் அல்ல. மாறாக, அவர் கடவுளுக்கு ஏற்புடையவரா என்பதில்தான் அடங்கியிருக்கிறது.

அப்படி என்றால், நாம் நற்செயல்கள் செய்யத் தேவையில்லையா? நல்லவராக இருக்கத் தேவையில்லையா?

நற்செயல்கள் செய்யலாம். நல்லவராக இருக்கலாம். ஆனால், அந்த நன்மைத்தனம் அடுத்தவர்களை அளக்கும் அளவுகோல்களாக மாறிவிடக் கூடாது.

முதல் ஏற்பாட்டில் முதல் சகோதரர்கள் காயினும், ஆபேலும் கடவுள்முன் காணிக்கைகள் கொண்டுவருகின்றனர். ஆபேல் ஏற்புடையவராகிறார். காயின் ஆகவில்லை. ஒருவரை ஏற்புடையவராக்குவது கடவுளே அன்றி, தனிநபரின் செயல்கள் அல்ல.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். சீராக் 35:12-14, 16-18), சீராக்கும், 'ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணிசெய்வோர் ஏற்றுக்கொள்ளப்படுவர்' என்று சொல்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 திமொ 4:6-8, 16-18) திமொத்தேயுவுக்கான தன் அறிவுரையை நிறைவு செய்யும் பவுலடியார், 'மற்றவர்கள் தன்னைவிட்டு அகன்றாலும், இறைவனின் அருட்கரம் தன்னை வழிநடத்தியதற்காக நன்றி நவில்கின்றார்.'

என்னை நானே ஏற்றுக்கொள்கின்றேனா? என்பது நான் கேட்க வேண்டிய முதல் கேள்வி.

என்னை மற்றவரோடு ஒப்பிட்டு என்னையே உயர்த்திக்கொள்கின்றேனா? என்பது இரண்டாம் கேள்வி. இப்படி உயர்த்திக்கொள்வது சால்பன்று.

இறுதியாக, தாழ்ச்சி என்பது கற்றுக்கொள்ளும் அல்லது பெற்றுக்கொள்ளும் மதிப்பீடு அன்று. மாறாக, நம் இல்லா நிலையை உணர்ந்தவுடன் தானாக வெளிப்படும் ஒன்று.

புத்தர் சிலையை மறைத்திருந்த களிமண் மழைநீரில் கரைந்ததால் அதிலிருந்த பொன் வெளிப்பட்டதுபோல, நம்மைச் சுற்றியிருக்கும் நம் வெளி அடையாளங்களையும், மற்றவர்களின் பாராட்டுக்களையும் மெல்ல மெல்ல உரித்தால் நம்மில் வெளிப்படும் பொன் இறைவனுக்கு நம்மை ஏற்புடையவராக்கும்.