இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









12 பிப்ரவரி 2017:  ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு

மிகுதியாகச் சொல்வதும், செய்வதும்!

சீராக் 15:15-20
1 கொரிந்தியர் 2:6-10
மத்தேயு 5:17-37

இந்த ஒரு வாரமாக தமிழகத்தின் அரசியல் ஒரு போர்க்களமாக இருக்கிறது. 'மக்களால் நான், மக்களுக்காக நான்' என்று நம் தமிழகத்திற்கு தலைமை ஏற்றவர் மறைந்தபின், மக்களைப்பற்றியே கவலை இல்லாத அவரின் தொண்டர்கள் தங்களின் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவும், பதவியை அடையவும் மேற்கொள்ளும் தந்திரங்கள் அரசியல் சாணக்கியம் என்று பேசப்படுகின்றது. காட்டிக்கொடுத்தல்களும், மறைத்தல்களும், கொடுக்கல்களும், வாங்கல்களுமாக நகர்கின்றது இந்த வாரம். வாக்களித்துவிட்டு தன் விரலில் மை அழிந்துவிட்டு சாதாரண தமிழன் தன் வேலைகளுக்கு நடுவில் கொஞ்ச நேரம் டிவி, பேப்பர், ஸ்மார்ட்ஃபோன் பார்த்து செய்திகளைக் தெரிந்து தன் புலம்பல்களைத் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு மௌனம் காத்துத் தவிக்கிறான்.

  நான் தேர்ந்தெடுத்த என் தலைவர் ஏன் இப்படி இருக்கிறார்?

என் ஜனநாயக உரிமை மௌனம் காப்பதுதானா?

இதற்கு மாற்று இல்லையா?

இந்தப் பின்புலத்திற்கு இன்றைய இறைவாக்கு வழிபாடு மிக அழகாகப் பொருந்துகிறது.

'முதிர்ச்சி பெற்றவர்களோடு நாங்கள் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறோம். ஆனால் இது உலக ஞானம் அல்ல. உலகத் தலைவர்களின் ஞானமும் அல்ல. அவர்கள் அழிவுக்குரியவர்கள்' என்று உலகத் தலைவர்களின் ஞானத்தைச் சாடுகின்றார் பவுல் (காண். இரண்டாம் வாசகம், 1 கொரி 2:6-10). உலகத் தலைவர்களின் கடவுளின் ஞானத்தை அறியாததால்தான் அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்தார்கள் என்பது பவுலின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

  உலகத் தலைவர்கள் கடவுளின் ஞானத்தை அறிவதில்லை. அறிய மெனக்கெடுவதுமில்லை. ஏனெனில் அவர்களின் ஞானத்தை நிர்ணயிப்பது பணம், அதிகாரம், சுயநலம், வெளிவேடம் என இருக்கிறது.

  கடவுளின் ஞானம் என்றால் என்ன?

இதற்கு விடை தருகிறது இன்றைய முதல் வாசகம் (காண். சீராக் 15:15-20). நம் வாழ்க்கையை நாம் வாழ்கின்றோமா? அல்லது கடவுளின் கட்டளை அல்லது விதிப்படி எல்லாம் நடக்கிறதா? என்ற கேள்விக்கு விடை தருகிறார் சீராக்.

'உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார். உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்.'

ஆக, 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்பதுபோல, அது கடவுளாலும், மற்றவர்களாலும் எனக்கு வருவதில்லை. மாறாக, என் விருப்புரிமையைப் பொறுத்தே அது அமைந்திருக்கின்றது.

இந்த விருப்புரிமையை நான் கண்டுகொண்டால் நான் ஞானத்தைக் கண்டுகொள்வேன்.

'ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு' (சஉ 3:1-10) என எல்லா நிகழ்வுகளையும் அதனதன் நேரத்தில் நடத்துபவர் இறைவன் என்றாலும், இந்த நிகழ்வுகளில் நமக்கும் நிறைய பங்குண்டு. 'பாவம் அல்லது தீமை செய்ய எனக்கு அனுமதி இல்லை என்றாலும்,' நான் அதைத் தேர்ந்து கொண்டால் கடவுள் என்னைத் தடுப்பதில்லை. என் போக்கிலேயே விடுகின்றார்.

ஆக, தீயதை விடுத்து நன்மையைப் பற்றிக்கொள்ளவும் எனக்கு உரிமை உண்டு. நன்மையை விடுத்து தீமையைப் பற்றிக்கொள்ளவும் எனக்கு உரிமை உண்டு.

'விருப்புரிமை' என்ற சொல்லாடலை எப்படிப் புரிந்துகொள்வது?

நம் காரில் ஏறி ரோட்டில் சென்றுகொண்டிருக்கிறோம். வழியில் போக்குவரத்து சிக்னல். ரெட் விழுகின்றது. காத்திருக்கிறோம். பச்சை விழுகின்றது. வேகமாக கியரை மாற்றி காரை இயக்குகின்றோம். நம் குறுக்கே ஒரு முதியவர் அல்லது குழந்தை அல்லது பெண் அல்லது யாரோ ஒருவர் சென்றுகொண்டிருக்கின்றார். போக்குவரத்து சிக்னல் நம்மை 'போ' என்று சொன்னாலும், நாம் போவதில்லை. நமக்குப் பின்னால் இருப்பவர் 'கீங், கீங்' என்று ஹார்ன் அடித்தாலும் நாம் முன்னேறிச் செல்வதில்லை. ஆக, சட்டம் 'போ' என்று கட்டளையிட்டாலும், நம்மைச் சுற்றி நிற்பவர்கள் கட்டாயப்படுத்தினாலும், 'நல்லது எது?' 'தீயது எது?' என்று சிந்திக்க, அதைச் செயல்படுத்த எனக்கு ஆற்றல் உண்டு. அதுதான் விருப்புரிமை. இந்த விருப்புரிமை விலங்குகளிடமிருந்து நம்மை வித்தியாசப்படுத்துகிறது. பசியால் இருக்கின்ற ஒரு பூனையின் முன் பாலை வைத்தால் அது உடனே குடித்துவிடும். ஆனால், நோன்பிருக்கின்ற நாம் எவ்வளவு பசி எடுத்தாலும் அந்தப் பாலை குடிப்பதில்லை. நாம் நம் உணர்ச்சிகளால் உந்தித் தள்ளப்படுபவர்கள் அல்லர்.

இயேசுவின் சீடர்கள் மேல் மற்றவர்கள் வைத்த ஒரு குற்றச்சாட்டு இதுதான்:

'க்ரீன் சிக்னல் விழுந்தாலும் இவர் முன்னேறிச் செல்வதில்லை. காரை நிறுத்திக்கொண்டே இருக்கின்றார்!'

கட்டளைகள் என்பவை நமக்கு முன் இருக்கும் க்ரீன் சிக்னல்கள். 'போ' என்று அவை சொல்லும்போது நாம் போக வேண்டும். ஆனால், கண்மூடித்தனமாக நாம் அவற்றை பின்பற்றினால் நமக்கு அடுத்திருப்பவருக்கு அழிவு வந்துவிடும் என இன்றைய நற்செய்தியில் விளக்குகிறார் இயேசு.

இன்றைய நற்செய்தி இயேசுவின் வாக்குறுதியோடு தொடங்குகிறது: 'திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வரவில்லை. அவற்றை நான் நிறைவேற்றவே வந்தேன்!'

'நிறைவேற்றுதல்' என்பதை நாம் முதலில் புரிந்து கொள்வோம்.

என் அம்மா என்னிடம் 100 ரூபாய் கொடுத்து, 'சர்க்கரை வாங்கி வா!' என்கிறார். நான் உடனே கடைக்குப் போய் சர்க்கரையை வாங்கி வருகிறேன். நான் வாங்கிக்கொண்டு வந்து என் அம்மாவிடம் கொடுத்தவுடன், என் அம்மா எனக்குக் கொடுத்த கட்டளை நிறைவேறுகிறது.

இது முதல் வகை நிறைவேற்றுதல். இது அல்ல இயேசு சொல்வது. பின் என்ன?

'சர்க்கரை வாங்கி வா!' என என் அம்மா 100 ரூபாய் கொடுக்கிறார்கள். எனக்கு, என் அம்மாவுக்கு, என் வீட்டில் உள்ளவர்களுக்கு சுகர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்த நேரத்தில் நான் என் அம்மாவின் வார்த்தைகளின்படி நடந்தால் இன்னும் அதிக நோய் ஏற்பாட்டிற்கு நான் காரணமாகிவிடுவேன். ஆக, நான் ஒரு படி போய், 100 ரூபாய்க்கு கருப்பட்டி வாங்கி வருகிறேன். இங்கே நான் என் அம்மாவின் வார்த்தைகளை மட்டுமல்ல. என் வீட்டின் நலத்தையும் நிறைவேற்றுகிறேன். இதுவே இயேசு சொல்லும் நிறைவேற்றுதல்.

இன்னும் ஒரு படி செல்வது. இன்னும் ஒரு கல் தூரம் பயணம் செய்வது. இன்னும் கொஞ்சம் மிகுதியாகச் செய்வது.

முதல் ஏற்பாட்டின் மூன்று கட்டளைகளை எடுத்து அவற்றை விரிப்புரிமையோடு செயலாற்றுவது எப்படி எனக் கற்பிக்கிறார் இயேசு. முதலில் முற்காலத்தவர்க்கு வழங்கப்பட்ட கட்டளையை பதிவு செய்து, பின் அதற்கான புதிய விளக்கத்தைக் கொடுத்து, அதை எப்படி வாழ்வாக்குவது என்று விளக்குகின்றார் இயேசு.

அ. 'கொலை செய்யாதே'

ஆ. 'விபச்சாரம் செய்யாதே'

இ. 'பொய்ச்சான்று சொல்லாதே'

இந்த மூன்று கட்டளைகளையும் 'உயிர்மை,' 'பெண்மை,' 'உண்மை' என எடுத்துக்கொள்வோம்.

அ. 'உயிர்மை' - 'கொலை செய்யாதே'

'கொலை செய்யாதே - கொலை செய்தால் தண்டனை' என்பது முற்காலத்தவருக்கு வழங்கப்பட்ட கட்டளை.

இந்தக் கட்டளை 'கொலை செய்தல்' என்ற ஒரு செயலைத்தான் மையப்படுத்துகிறதே தவிர, அந்தச் செயலுக்குத் தூண்டுகோலாக இருக்கின்ற 'கோபம், மனத்தாங்கல், பகைமை' போன்ற உணர்வுகளைப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. ஆனால், இந்த மூன்று உணர்வுகள்தாம் கொலை செய்ய ஒருவரைத் தூண்டுகின்றன.

இங்கிருக்கும் நம்மில் யாரும் யாரையும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், இயேசு சொல்கின்ற இந்த மூன்று உணர்வுகளும் நம்மிடம் இருக்க வாய்ப்பிருக்கிறது.

நம் சகோதர, சகோதரிகளை நாம் 'முட்டாள்,' 'அறிவுகெட்டவனே, அறிவுகெட்டவளே' என்கிறோம். அவர்கள் மேல் கோபப்படுகிறோம். அல்லது அவர்களுக்கு நம் மேல் மனத்தாங்கல் இருக்கிறது என்று தெரிந்தும் பலி செலுத்துகின்றோம். அல்லது நம் எதிரிகளோடு சமரசம் செய்து கொள்ளாமல், 'நாளை பார்த்துக்கொள்ளலாம்!' என தள்ளிப்போடுகிறோம்.

உயிர்மை என்றால் உயிரின் மேன்மையைக் காப்பது மட்டுமல்ல. மாறாக, நம் சகோதர, சகோதரிகளோடு நம் உடனிருப்பை உறுதி செய்வது. எதிரிகளோடு உடனிருப்பை ஏற்படுத்திக்கொள்வது. இறைவனோடு உடனிருப்பை ஏற்படுத்த ஆலயத்திற்கு வருமுன் நாம் உறுதி செய்யவேண்டியது மற்றவர்களின் உடனிருப்பை.

இவ்வாறாக, 'கொலை செய்யாதே' என்ற கட்டளைக்கு புதிய பொருள் கொடுப்பதன் வழியாக, அதை உறவு மற்றும் உடனிருப்பை நோக்கி நீட்டுவதன் வழியாக இன்னும் கொஞ்சம் மிகுதியாகச் செய்யச் சொல்கின்றார் இயேசு.

ஆ. 'பெண்மை' - 'விபச்சாரம் செய்யாதே'

இயேசுவின் சமகாலத்திலும், இந்தச் சட்டம் இயற்றப்பட்ட காலத்திலும் பெண்கள் வெறும் பொருள்களாக மட்டுமே பார்க்கப்பட்டனர். தாய், மனைவி, சகோதரி, விதவை, மகள், விபச்சாரி, ஓடுகாளி, வாழாவெட்டி என அவள் ஆணை அடையாளப்படுத்தியே அறியப்படுகிறாள். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணைத் தண்டிக்க முயலும் கூட்டம், அதில் பிடிபடும் ஆணை ஒன்றும் செய்வதில்லை. பெண்ணும், ஆணும் இணைந்து செய்தல்தானே விபச்சாரம். மேலும், மணவிலக்கு சான்றிதழ் கொடுத்தலும் நிலவியது. அதாவது, என் மனைவியை ஏதோ ஒரு காரணத்திற்காக எனக்குப் பிடிக்கவில்லை என்றால் அவரை நான் அப்படியே விவாகரத்து செய்துவிடலாம். அவரின் விருப்பத்தைக் கேட்கத் தேவையில்லை. அவரின் வாழ்வாதாரம் பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை.

  இயேசு இந்தக் கட்டளையை இன்னும் ஒருபடி மேல் எடுத்துச் செல்கின்றார்.

'பெண்ணை இச்சையுடன் பார்ப்பதும் விபச்சாரம்' என்றும், 'உடல் புலன்களின் கட்டுப்பாடு அவசியம்' என்று புதிய விளக்கம் தரவும், 'விலக்கப்பட்டவரை மணப்பவரும் விபச்சாரம் செய்கிறார்' என்று ஆணின் முகமூடியைக் கழற்றவும் செய்கிறார் இயேசு.

நாம் செய்யும் செயல்கள் இரண்டு முறை செய்யப்படுகின்றன. ஒன்று நம் மனத்தில். இரண்டு வெளியில். பாலியல் பிறழ்வுகள் என நாம் கேள்விப்படும் அனைத்து நிகழ்வுகளும் முதலில் அதை நடத்துபவர்களின் மனதில் நடத்தப்படுகின்றன. ஆக, அந்த எண்ணத்தை மனதில் இருந்து நாம் அகற்றும்போது செயலை எளிதாக அகற்றிவிட முடியும். அதை விடுத்து, செயலைக் குறைப்பதிலேயே நாம் குறியாக இருந்தால் நாம் மீண்டும் அதே செயல்களில் விழுவதற்கு வாய்ப்புகளை உருவாக்கிவிடுகிறோம்.

ஒரு சமூகத்தில், ஒரு குடும்பத்தில், ஒருவரின் உள்ளத்தில் பெண்மை போற்றப்பட வேண்டும். பெண்மை என்பது ஒரு எதிர்பாலினம் அல்ல. மாறாக, நம் உள்ளத்தில் பொங்கும் அன்பு, பாசம், ஏற்றுக்கொள்ளுதல், பரிவு என அனைத்தின் வெளிப்பாடு. (அம்மா, சின்னம்மா என்று வார்த்தைகள் சில நேரங்களில் பெண்மையின் பொருளை மாற்றிக்காட்டலாம்). ஆனால், நம் வீட்டின் அம்மா மற்றும் சின்னம்மா, பெரியம்மா காட்டிய அன்பு, தியாகம், பரிவு ஆகியவற்றை நாம் மறக்க முடியாது.

ஆக, பெண்மையை மேன்மைப்படுத்துவதிலும் இன்னும் கொஞ்சம் மிகுதியாகச் செய்யச் சொல்கின்றார் இயேசு.

இ. 'உண்மை' - 'பொய், ஆணை வேண்டாம்!'

'பொய்ச்சான்று சொல்லாதே!' என்பது முன்னவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டளை. அத்தோடு இணைத்து, 'ஆணை இடாதீர்' என்ற விதிமுறையையும் கையில் எடுக்கின்றார் இயேசு.

பொய் என்றால் உண்மையின் பிறழ்வு.

உண்மை என்றால் சொல் தூய்மை. ஆகையால்தான் இதை 'வாய்மை' என்கிறார் திருவள்ளுவர்.

'ஆம்' என்பதை 'இல்லை' என்பதும், 'இல்லை' என்பதை 'ஆம்' என்பதும் பொய். ஆகையால்தான், 'ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும், 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள்' என்கிறார் இயேசு.

இதுவரை மிகுதியாகச் செய்வதை வலியுறுத்திய இயேசு. மிகுதியாகச் சொல்வதைக் கண்டிக்கிறார். 'இதைவிட மிகுதியாகச் சொல்வது தீயோனிடமிருந்து வருகிறது' என்கிறார்.

நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளைவிட மிகுதியாகச் செய்யும்போது நாமும் நம் விருப்புரிமைக்குச் செயல்வடிவம் கொடுக்கின்றோம். இதுவே கடவுள் தூய ஆவியானவர் வழியாக நம் உள்ளத்தில் தூண்டி எழுப்பும் ஞானம்.

பரிசேயர்களின் நெறியைவிட சிறந்திருக்க வேண்டும் சீடர்களின் நெறி.

மிகுதியாகச் செய்வதும், குறைவாகச் சொல்வதும்தான் சீடர்களின் நெறி. இவ்வுலகின் தலைவர்கள் மிகுதியாகச் சொல்கின்றனர். ஆனால் குறைவாகச் செய்கின்றனர். நம் நெறி சீடர்களின் நெறியாக இருக்கட்டுமே.

இன்று எப்படி மிகுதியாகச் செய்வது?

1. நமக்கு விருப்புரிமை இருக்கிறது என நாம் நினைப்பதுபோல, அது அடுத்தவருக்கும் இருக்கிறது என்பதைக் கண்டுகொள்வோம். குடும்ப, பங்கு வாழ்வில், 'நான் நினைப்பதுதான் சரி! நீ நினைப்பது தவறு!' என்று 'நான் வென்று, அடுத்தவரைத் தோற்கடிக்கும் நிலை'யை மாற்றுலாம்.

2. மனிதர்களின் ஞானம், தலைவர்களின் ஞானம்தான் சிறந்தது என நமக்கு வெளியில் இருந்து வருபவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு அதற்கு அடிபணிந்துவிடாமல், அவைகளையும் தாண்டிய கடவுளின் ஞானத்தை அறிந்து கொள்ள, அதை நம் நெறியாக்க முற்படலாம்.

3. உயிர்மையைப் பேணலாம். கோபம் குறைக்கலாம். கோபம் குறைக்க வேண்டுமெனில் நம் எதிர்பார்ப்புகள் குறைய வேண்டும். 'முட்டாள்,' 'அறிவிலி' என சாடுவதற்குப் பதிலாக, நல்ல சொற்களைச் சொல்லலாம். பிறரை மௌனமாக ஆசீர்வதிக்கலாம். 'நல்லா இரு!' என்று சத்தமாக வாழ்த்தலாம். பலிபீடத்திற்கு பலி செலுத்த வருமுன் நம் உறவுகளை, நண்பர்களை நினைத்து நன்றி சொல்லலாம். யாரையாவது காயப்படுத்தியிருந்தால், அல்லது யாராவது நம்மைக் காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோரலாம், மன்னிப்பு வழங்கலாம். நாம் எதிரி என நினைப்பவர்களோடு உடன்பாடு செய்துகொள்ளலாம்.

4. பெண்மை போற்றலாம். நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில்கூட பெண்களின் மாண்பைக் குலைக்கும் வார்த்தைகளைத் தவிர்க்கலாம். நம் இல்லங்களில் அல்லது நட்பில் உள்ள பெண்களை - தாய், மனைவி, மகள், சகோதரி, தோழி, காதலி - மாண்புடன் நடத்தலாம். நம் சொல் மற்றும் செயலில் வன்மை தவிர்க்கலாம். திருமணத்தில் புரிதல் இன்மை, சந்தேகம், கோபம் வளரும்போது உடனடியாக அமர்ந்து, பேசி, வெளிப்படையாக சரிசெய்துகொள்ள முன்வரலாம்.

5. உண்மை பேசலாம். கடவுளின் முன் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். ஏனெனில் அதை நம்மால் நிறைவேற்ற முடியாமல் போகலாம். பிறருக்கு வாக்குறுதிகள் கொடுக்கும்போதும் அவசரம்-அவசியம் அறிந்து செயல்படலாம். அடுத்தவரைப் பற்றி புறங்கூறுதலைத் தவிர்க்கலாம். ஒரு புதிய செய்தியை அடுத்தவரிடம் இருந்து கேட்கும் போது அது எனக்குத் தேவையா, இல்லையா, ஏன், எதற்கு என எண்ணிப்பார்த்து அறிந்து கொள்ளலாம். மிகக் குறைந்த வார்த்தைகளைப் பேசவும், பேசுபவற்றைத் தெளிவாகப் பேசவும் கற்றுக்கொள்ளலாம்.

ஆக, மிகுதியாகச் செய்யவும், மிகுதியாகச் சொல்லவும்,

நன்மையைத் தேர்ந்து கொள்ளவும், தீமையைத் தேர்ந்து கொள்ளவும்,

நீரில் வளரவும், நெருப்பில் அணைந்து போகவும் நமக்கு உரிமை உண்டு.

கைகளை நீட்டித் தொடுவோம்.

மிகுதியாகச் செய்வோம். குறைவாகச் சொல்வோம். ஆமென்.