உயிர்ப்புக் காலம் ஐந்தாம் ஞாயிறுதந்தை - நான் - நீங்கள்திப 6:1-7 1 பேது 2:4-9 யோவா 14:1-12 இன்றைய நாளின் இறைவாக்கு வழிபாடு மிக ஆழமான இறையியல் கட்டுரையாக உள்ளது. தன் சீடர்களின் பாதங்களைக் கழுவிவிட்டு அவர்களோடு அமர்ந்து மனம் திறந்து பேசும் உரையாடலின் ஒரு பகுதியே இன்றைய நற்செய்தி (காண். யோவான் 14:1-12). 'நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்' என தன் சீடர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் இயேசு அவர்களின் இரண்டு கேள்விகளுக்குப் பதில் தருகின்றார். இந்தக் கேள்விகளையும், அவர் தரும் விடைகளையும் மற்ற இரண்டு வாசகங்களோடும், நம் வாழ்வோடும் இணைத்துச் சிந்திப்போம்.
இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் அவர் தம் சீடர்களுக்குத் தோன்றியதையும், எம்மாவு நோக்கி பயணம் செய்ததையும் பற்றி சிந்தித்த நம்மை அவரின் விண்ணேற்றம் பற்றி சிந்திப்பதற்கான தயாராக இருக்கிறது இயேசு தம் சீடர்களோடு மேற்கொள்ளும் உரையாடல். 'நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்' என்ற வாக்குறுதி தருகின்றார் இயேசு.
இந்த வாக்குறுதியில் மூன்று விடயங்கள் அடங்கியிருக்கின்றன:
அ. இயேசு தன் தந்தையிடம் திரும்பிச் செல்லவிருக்கின்றார்.
ஆ. திரும்பிச் செல்லும் அவர் மீண்டும் வருவார்.
இ. சீடர்களையும் தன்னோடு அவர் அழைத்துச் செல்வார்.
இந்த மூன்று விடயங்களுமே சீடர்களுக்குப் புரியாத புதிர்களாக இருக்கின்றன. இயேசு என்றும் தன்னோடு இருப்பார்கள் என நினைக்கின்றனர் சீடர்கள். தன் தந்தையிடம் திரும்பிச் செல்கிறார் என்றால் அவர் எப்போது செல்வார்? இறப்பிற்குப் பின்னா? அவர் உயிர்ப்பாரா? உயிர்ப்பு அனுபவம் எப்படி இருக்கும்?
இயேசு ஏற்கனேவே இங்கே இருக்கிறார். அப்படி இருக்க அவர் எப்படி மீண்டும் திரும்பி வர முடியும்.
சீடர்களைத் தன்னோடு அழைத்துச் செல்வார் என்றால் அவர்கள் எப்படி அவரோடு செல்வார்கள்?
எல்லாச் சீடர்களுக்குமே புரியாமல் இருக்க, தோமாவும், பிலிப்பும் மட்டும் இயேசுவிடம் கேள்விகளாகவே கேட்டுவிடுகின்றனர்.
முதல் கேள்வி:
'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படி தெரிந்து கொள்ள இயலும்?'
இது தோமாவின் கேள்வி.
இந்தக் கேள்வி 'அறிதலின்' அடிப்படையில், அல்லது 'அறியாமையின்' நிலையில் இருக்கின்றது.
இரண்டு அறியாமை: (அ) இயேசு எங்கே போகிறார் என்பது தெரியாது. (ஆ) அவர் போகுமிடத்திற்கான வழி தெரியாது.
தோமாவின் கேள்விக்கு, 'இதோ நான் இங்கே போகிறேன். இதுதான் வழி' என்று நேரிடையாகச் சொல்வதற்குப் பதிலாக,
'வழியும், உண்மையும், வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை' என்கிறார் இயேசு.
இயேசுவின் பதிலிலிருந்து நாம் தோமாவின் கேள்விகளுக்கான விடைகளை ஊகித்துக்கொள்ள முடியும்:
(அ) இயேசு தந்தையிடம் போகிறார்.
(ஆ) தந்தையிடம் செல்வதற்கான வழி இயேசுவே.
இரண்டாம் கேள்வி:
இது கேள்வி என்று சொல்வதற்குப் பதிலாக விண்ணப்பம் என்று சொல்லலாம்:
'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும்'
இது பிலிப்பின் விண்ணப்பம்.
இந்த விண்ணப்பத்திற்கு பதில் தரும் இயேசு அதை மூன்று கேள்விகளாகத் தருகின்றார்:
(அ) இவ்வளவு காலம் நான் உங்களோடு உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா?
(ஆ) என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, தந்தையை எங்களுக்குக் காட்டும் என்று நீ எப்படிக் கேட்கலாம்?
(இ) நான் தந்தையினுள்ளும், தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?
இயேசுவின் இந்தக் கேள்விகள் அறிதல், கேட்டல், நம்பிக்கை கொள்தல் என்ற மூன்று நிலைகளில் இருக்கிறது.
மேற்காணும் கேள்விகள்-பதில்களிலிருந்து நாம் மூன்று உள்கருத்துக்களை எடுத்துக்கொள்வோம்:
1.தந்தையாகிய இறைவனே கடவுள். அந்தக் கடவுளிடம் திரும்பிச் செல்கிறார் இயேசு. அப்படி என்றால், அவர் அந்தக் கடவுளிடமிருந்து வந்தவர். மேலும், தந்தையும் இயேசுவும் ஒருவர் மற்றவரோடு இணைந்திருப்பதால் இயேசுவும் கடவுளே.
2. தந்தை மற்றும் இயேசு என்னும் இந்தக் கடவுளோடு சீடர்களும் இணைந்துகொள்ள முடியும். ஆக, கடவுள்தன்மையில் இருந்து மனிதர்கள் அந்நியப்பட்டவர்கள் அல்லர். மாறாக, அந்த தன்மையில் இணைந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். இந்த ஆற்றலை உறுதி செய்பவர் இயேசு.
3. சீடர்கள் இயேசுவோடு ஏற்படுத்திக்கொள்ளும் ஒன்றிணைப்புக்கு அடிப்படை தேவை அவர்கள் இயேசுவின்மேல் கொண்டிருக்கின்ற நம்பிக்கை. இயேசுவும் தந்தையும் ஒன்று என்று நம்ப வேண்டும். அந்த தந்தையின் ஒன்றிப்பை நம்புவதற்கு இயேசுவின் சொற்களும், செயல்களும் சான்றாக அமைகின்றன.
ஆக, 'தந்தை - நான் - நீங்கள்' என்ற முக்கோண ஒன்றிப்பு உறவிற்கு நம்மை அழைக்கிறது இன்றைய முதல் வாசகம்.
'கடவுள் நம்மோடு' என இம்மானுவேலராக வந்த இயேசு, 'கடவுள் நமக்காக' என ஏறிச்செல்ல தயாராகின்றார்.
அவரோடு ஒன்றிணைப்பு சாத்தியமே.
இத்தகைய ஒன்றிணைப்பையே இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்களில் பார்க்கின்றோம்.
நற்செய்தி அறிவிப்பு பணி வழியாக கடவுளோடு ஒன்றித்து வாழ விரும்பும் திருத்தூதர்கள், பந்தியில் பணிபுரிவதற்காக திருத்தொண்டர்களைத் தெரிவு செய்கின்றனர். தங்கள் பணிகளை பிரித்துக் கொடுப்பதன் வழியாக தாங்கள் கடவுளோடும், ஒருவர் மற்றவரோடும் ஒன்றிணைந்து கொள்கின்றனர்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புதிய திருச்சபையை அரச குருத்துவ திருக்கூட்டம் என வாழ்த்துகின்ற பேதுரு இந்த திருக்கூட்டத்தில் துலங்க வேண்டிய ஒன்றிப்பை வலியுறுத்துகின்றார்.
இறுதியாக,
தந்தை-நான்-நீங்கள் என்ற ஒன்றிப்பு நம்மில் எழுந்தால் நாமும் வழியைக் கண்டவர்களாவோம்.
இன்றைக்கு நம்மிடம் உள்ள பெரிய மனக்குறை என்ன தெரியுமா? என்ன செய்றதுன்னு தெரியலேயே? என்பதுதான். இந்த மனக்குறைக்குக் காரணம் நம்முன் நிறைய சாய்ஸ் இருக்கிறது. எதை எடுக்க? எதை விட்டு விட?
இன்றைய உலகை ஒரு ஏதேன் தோட்டம் என்று சொல்லலாம். நம்மைச் சுற்றி எண்ணற்ற மரங்கள் இருக்கின்றன. நாம் அனுப்பிய செயற்கைக் கோள்கள் நம்மைச் சுற்றி விண்மீன்களாக இருக்கின்றன. நம் அந்தரங்களுக்குள் வந்து பார்க்க நாம் நம் தொழில்நுட்பத்திற்கு அதிகமாகவே இடம் கொடுத்து விட்டோம். நாம் எங்கே இருக்கிறோம்? யாரோடு பேசிக் கொண்டிருக்கிறோம்? எவ்வளவு செய்திகளைப் பரிமாறுகிறோம்? எவ்வளவு செலவழிக்கிறோம்? எவ்வளவு கடன் வாங்குகிறோம்? எந்தக் கலர் வீட்டில் குடியிருக்கிறோம்? எந்நேரம் துணி துவைத்து நம் மொட்டை மாடியில் காய வைத்தோம்? எல்லாமே எல்லாருக்கும் தெரியும். நாம் வெறும் டேட்டா. நம்மை அழிக்கலாம். டவுன்லோட் செய்யலாம். அப்லோட் செய்யலாம். ஷேர் செய்யலாம். ஏதேன் தோட்டத்தின் ஆதாம், ஏவாளைப் போல நாமும் நிர்வாணமாகத் தான் நிற்கின்றோம். நாமும் வெட்கப்படுவதில்லைதான்! இன்று நம்மைச் சுற்றி நம்மைச் சோதிக்கும் பாம்பு கையாளும் ஒரே சொல்லாடல் இதுதான்: 'இதைவிட அது பெட்டராத் தெரியல?!' இந்தக் கேள்வியால் அது ஒவ்வொரு பொழுதும் நம்மைச் சோதித்துக்கொண்டே இருக்கின்றது.
இந்தப் பெண்ணைவிட அவள் பெட்டராத் தெரியல? இந்த மொபைலை விட அது பெட்டராத் தெரியல? ஆன்ட்ராய்டை விட ஆப்பிள் பெட்டராத் தெரியல? யாகுவை விட கூகுள் பெட்டராத் தெரியல? பிரிட்டானிக்காவை விட விக்கிபீடியா பெட்டராத் தெரியல? வைபரை விட வாட்ஸ்ஆப் பெட்டராத் தெரியல? பிஎஸ்என்எல்லை விட ஏர்டெல் பெட்டராத் தெரியல? நாம் எதை எடுத்தாலும் மற்றொன்று அதை விட பெட்டராகவே தெரிகிறது. வாழ்வின் கனியும், அறிவின் கனியும் இன்று நம் கண்கள் முன் வந்து போகின்றன. இது வாழ்வு தராதா? இது அறிவு தராதா? என்று நம் மனம் அலைபாய்கின்றது. ஆதாம், ஏவாளை விட இன்று நமக்குச் சோதனைகள் அதிகம்தான். பாவம் மனிதர்கள்!
இந்தக் காலகட்டத்தில் இயேசுவும் ஒரு ஆஃபர் கொடுக்கின்றார்: நானே வழியும், எதார்த்தமும், வாழ்வும். இந்த ஆஃபரின் பொருள் என்ன? வழி, எதார்த்தம், வாழ்வு என்பது இயேசுவின் மூன்று அடையாளங்கள் மட்டுமல்லை. அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை.
வழி நற்செய்தி நூல்களில் மிகவும் முக்கியமான ஒன்று. இடுக்கலான வழி, குறுகலான வழி, 'யார் பெரியவர்?' என்று வாதிடும் வழி, வழிப்போக்கனாக இயேசு எம்மாவு நோக்கிப் பயணிக்கும் வழி, சிலுவையின் வழி என எண்ணற்ற வழிகளை நாம் பார்க்கின்றோம். நாம் மேற்கொள்ளும் வெளிஉலகப் பயணத்திற்கான வழியை கூகுள் மேப்ஸ் இன்று எளிதாகக் காட்டிவிடுகிறது. நாம் தவறினாலும் சுட்டிக் காட்டுகிறது. வேகமாகச் சென்று இலக்கை அடைய நிறைய சாய்சும் இருக்கின்றது. ஆனால் உள்மனப் பயணத்திற்கு நமக்கு உதவு எந்த அப்ளிகேசனும் இன்னும் வரவில்லையே? வழி தெளிவாக வேண்டுமென்றால் இலக்கு தெளிவாக வேண்டும். இலக்கு தெளிவில்லாமல் இருக்கும் போது நாம் எந்த வழியில் போனாலும் அது ஒரு பெரிய மாற்றத்தை நம்மிடம் கொண்டு வருவதில்லை.
நம் இலக்கு வாழ்வாகவும், அதற்கான வழி உண்மை எனவும் இருக்க வேண்டும். இவ்வாறாக வழி, வாழ்வு, உண்மை ஒன்றோடொன்று கரம் கோர்க்கிறது. கிரேக்க மொழியில் உண்மை என்று சொல்லப்பட்டிருப்பதை விட எதார்த்தம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. எதார்த்தம் என்பது மிகவும் நெகிழ்வான பொருள் கொண்டது. எதார்த்தம் என்றால் என்ன? பிறழ்வு படாத எல்லாமே எதார்த்தம். பிறழ்வு பட்டால் அது பொய் என மாறிவிடுகின்றது. மிகச் சின்ன உதாரணம். பசு பால் தரும் என்பது எதார்த்தம். அதையே ஆவினும், ஆரோக்கியாவும் தருகிறது என்றால் அது பிறழ்வு. என்னதான் அவர்கள் முயற்சி செய்து 100 சதவிகித பாலைத் தர முயன்றாலும் அது பிறழ்வுதான். நம்மை அறியாமலேயே நாம் உண்மைகளையெல்லாம் பாக்கெட்டில் அடைக்கத் தொடங்கிவிட்டோம். ஆடை என்பது எதார்த்தம். ரேமண்ட் என்றும் குரோகொடைல் என்றும் அதை பாக்கெட் செய்வது பிறழ்வு. பிறழ்விலிருந்து எதார்த்தத்தை நாம் பிரித்தெடுக்கும் மனப்பக்குவம் பெற வேண்டும். நம் வாழ்வில் உணர்வுகளில், எண்ணங்களிலும் நாம் பிறழ்வுகள் கொண்டிருக்கிறோம். 'அனைவரும் சமம்' என்பது எதார்த்தம். 'நான் பெரியவன் - நீ சிறியவன்' என்பது பிறழ்வு. 'எல்லாரையும் அன்பு செய்ய வேண்டும்!' என்பது எதார்த்தம். அன்பு ஒரு மோகப் பொருளாக மாறுவது பிறழ்வு. பிறழ்வுகள் களைவதே உண்மை. இயேசுவின் வாழ்க்கையில் பிறழ்வுகள் என்பதே இல்லை. தன்னைச் சுற்றியிருந்த சமுதாயத்தில், சமயத்தில் நிலவிய பிறழ்வுகளின் ஆடை உரிக்கின்றார் அவர். பிறழ்வு என்பது சைனா ஃபோன் மாதிரி. ரொம்ப சத்தம் போடும். ஆனால் உண்மை என்பது ஆப்பிள் ஃபோன் மாதிரி. அமைதியாக இருக்கும்!
வழியின் இலக்கு வாழ்க்கையாக இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியிருக்கும் காரணிகளை வாழ்வின் காரணிகள், இறப்பின் காரணிகள் என இரண்டாகப் பிரிக்கின்றார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால். நமக்கு நிறைவான மகிழ்வைத் தருவது வாழ்வின் காரணி எனவும், உடனடி இன்பம் தருவது சாவின் காரணி எனப் பொருள் கொள்ளலாம். கருத்தடை வாழ்வின் காரணியா? இல்லை. உடனடியாக நமக்கு இன்பம் தருகிறது. குடும்பம் என்ற பொறுப்பிலிருந்து நமக்கு விடுதலை தருகிறது. காலப்போக்கில் அது நம் மகிழ்வையே எடுத்து விடுகிறது. பொய் என்பது சாவின் காரணி. பொய் சொல்லும் போது உடனடியாக வரும் ஒரு பிரச்சினையிலிருந்து தப்பி விடலாம். ஆனால் காலப்போக்கில் அது பெரிய ஆக்டோபஸாக வளர்ந்து நம்மை இறுக்கி விடுகிறது.
நாம் கேட்க வேண்டியதெல்லாம் இதுதான்: 'இன்று இயேசு என்ன செய்வார்?' என் அலுவலகத்தில், என் கல்லூரியில், என் குடும்பத்தில் இன்று இயேசு இருந்தால் என்ன செய்வார்? அதை ஒரு நிமிடம் நினைத்து அதன் படி நாமும் செய்தால் அதுவே வழி! வாழ்வு! எதார்த்தம்!
தந்தை - நான் - நீங்கள் - இதுவே இயேசு தரும் வழி, உண்மை, வாழ்வு!
|