ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறுமன்னிக்கும் மனம்சீராக்கின் ஞானம் 27:30-28:7 உரோமையர் 14:7-9 மத்தேயு 18:21-25 டெகார்ட் என்ற பிரெஞ்சு மெய்யியலாளரின், 'கோஜிட்டோ எர்கோ சும்' என்ற சொல்லாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. மறுமலர்ச்சி காலம் தொடங்கியபொழுது, 'நான் சிந்திக்கிறேன். எனவே நான்' என்று பொருள்கொள்ளும் இந்தச் சொல்லாடல் மெய்யியலின் போக்கையே மாற்றிப்போட்டது.
1990 களில் பொதுவுடைமை மறைந்து பொருளாதாரத்தில் உலகமயமாக்கல் அல்லது முதலாளித்துவம் தலைதூக்கியபோது, 'சுமோ எர்கோ சும்' என்ற சொல்லாடல் உருவானது. 'நான் வாங்குகிறேன். எனவே நான்' என்பது இதன் பொருள்.
ஆனால், 2000 ஆண்டுகளாக கிறித்தவத்தின் அடிநாதமாக இருக்கும் சொல்லாடல் 'திமித்தோ எர்கோ சும்'. அதாவது, 'நான் மன்னிக்கிறேன். எனவே நான்.'
கிறித்தவத்தின் பிதாமகன் இயேசு, 'தந்தையே இவர்களை மன்னியும்' என்று தன் வாழ்வின் கடைசி நேரத்தில் அனைவரையும் மன்னித்தவர், 'மன்னிப்பு' ஒன்றையே தன் இறையாட்சியின் மையப்பொருளாகவும், தன் போதனையின் கருப்பொருளாகவும் கொண்டிருந்தார். மன்னிப்பு என்பது கோழைத்தனம் என்று சிலர் எண்ணலாம். உண்மையில், மன்னிப்பதற்குத்தான் அதிக மனத்திடமும், தைரியமும் தேவை.
இயேசுவின் மன்னிப்பு போதனை யூதக் காதுகளுக்கு அலர்ஜியாக அல்லது வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்று பழகிப்போன அவர்களுக்கு, 'உங்கள் பகைவர்களையும் மன்னியுங்கள்' என்று இயேசு சொன்னது கண்டிப்பாகப் புரிந்திருக்காது. 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்பது அவர்களைப் பொறுத்தவரையில் பழிதீர்த்தல் அல்ல. மாறாக, திருப்பிக் கொடுத்தல். 'எனக்கு வருவதை நான் திருப்பிக் கொடுக்க வேண்டும்' என்று அவர்கள் நினைத்தது சரிதான். ஏனெனில் இதைத்தான் நியூட்டனின் மூன்றாம் விதியும் சொன்னது: 'ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு.' இப்படித்தான் இயற்கையும் நடப்பதாக அவர்கள் நம்பினார்கள். 'மன்னிப்பு' என்ற வார்த்தையால் இயேசு இயற்கையின் போக்கையே திருப்புகின்றார்.
நம் மனித உடலும், உள்ளமும் இயல்பாகவே திருப்பிக் கொடுப்பதற்கே பழகியிருக்கிறது. இதைத்தான் நாம் உடலியல் படிப்பில் 'ரிஃப்ளக்ஸ்' என்கிறோம். நாம் ஒருவர் மற்றவரை மன்னிப்பதற்கு 'ரிஃப்ளக்ஸ்' என்னும் நிலையிலிருந்து 'ரிஸ்பான்ஸ்' என்ற நிலைக்குக் கடந்து செல்வது அவசியம் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 18:21-35) நமக்கு அறிவுறுத்துகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் சூழல் பேதுருவின் கேள்வி: 'ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறையா?' யூதப் போதனையும் மன்னிப்பைப் பற்றி பேசியது. ஆனால், மூன்றுமுறை மன்னித்தால் போதும் என வரையறுத்தது. பேதுரு கொஞ்சம் அதிகம் சென்று, 'ஏழு முறை போதுமா?' எனக் கேட்கிறார். நிறைவு அல்லது முழுமை என்பதைக் குறிக்கும் எண் ஏழு. இந்த நிறைவு போதுமா? எனக் கேட்பது போல இருக்கிறது பேதுருவின் கேள்வி. 'எண்ணிக்கை வேண்டாம். நீ சுவாசிக்கும் சுவாசத்திற்கு எண்ணிக்கை உண்டா?' என்று கேட்பது போல இருக்கிறது இயேசுவின் பதில்: 'ஏழுமுறை மட்டுமல்ல. எழுபது முறை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்.' சொல்லி முடித்தவுடன் மன்னிப்பைப் பற்றிய ஓர் உவமையையும் சொல்கிறார் இயேசு.
'மன்னிப்பு' என்று தொடங்குவதற்குப் பதிலாக, 'விண்ணரசு பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்' எனத் தொடங்குகிறார் இயேசு. இவ்வாறாக, விண்ணரசின் முதற்கூறாக இருப்பது 'மன்னிப்பு' என்பதையும் உணர்த்திவிடுகிறார் இயேசு. இயேசுவின் உவமையில் மூன்று முக்கிய கதைமாந்தர்கள் இருக்கிறார்கள்: 'அரசன், பணியாளன் எக்ஸ், பணியாளன் ஒய்.' அரசனுக்கும் பணியாளன் எக்ஸ்க்கும் உள்ள உறவு மேல் கீழ் உறவு. பணியாளன் எக்ஸ்க்கும், பணியாளன் ஒய்க்கும் உள்ள உறவு சமநிலை உறவு. மேல் கீழ் உள்ள உறவில் பணியாளன் எக்ஸ் கடன்பட்டிருக்கும் தொகை 10000 தாலந்து (10 கோடி என வைத்துக்கொள்வோம்). சமநிலை உறவில் பணியாளன் ஒய் கடன்பட்டிருக்கும் தொகை 100 தெனாரியம் (1000 ரூபாய் என வைத்துக்கொள்வோம்). இரண்டு தொகைகளுக்கும் உள்ள வித்தியாசம் நம்மை மலைக்க வைக்கிறது. இரண்டு பணியாளர்களுமே தாங்கள் கடன் பட்டவர்களிடம் முறையிடுகின்றனர். பணியாளன் எக்ஸை மன்னித்துவிடுகின்றார் அரசன். பணியாளன் ஒய்யை மன்னிக்க மறுக்கின்றான் பணியாளன் எக்ஸ். இது அரசனுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அரசன் தன் மன்னிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்கின்றார். ஆக, மன்னிப்பை அவன் மற்ற பணியாளனுக்குத் தராததால் அவன் பெற்ற மன்னிப்பு திரும்ப பெறப்படுகின்றது. அல்லது மேலிருந்து கீழாக மன்னிப்பு பெற்ற ஒருவர் அதை சமநிலையில் இருக்கும் மற்றவரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே இயேசு சொல்லும் மன்னிப்பு பாடம். 'வானகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்' (மத் 5:48) என இயேசு சொல்வதன் பொருளையும் இங்கே உணரமுடிகிறது.
'மன்னிப்பு' - இதை நாம் எளிதாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால் இதை வாழ்வாக்குவது மிகவும் கடினம். நம்ம வாழ்க்கையில சில நேரங்களில் மேலிருந்து கீழ் அல்லது கீழிருந்து மேல் மன்னித்து விடுகிறோம். உதாரணத்திற்கு, என் அறையில் வேலை செய்யும் பெண் எனக்குத் தெரியாமல் ஒரு 100 ரூபாயை எடுத்துக்கொண்டால் அதை மன்னித்துவிடுவது எளிது. அல்லது அலுவலகத்தில் எனக்கு மேலிருக்கும் பாஸ் என்மேல் தவறாகக் கோபப்பட்டுவிட்டால் அவரை மன்னிப்பது எளிது. இந்த இரண்டு நிலைகளிலும் ஒரு சார்பு நிலை இருக்கிறது: வேலைக்காரப் பெண் என்னைச் சார்ந்திருக்கிறார். நான் என் பாஸை சார்ந்திருக்கிறேன். மன்னிப்பு எங்கே கடினமாகிறது என்றால் சமநிலையில் இருப்பவர்களிடம்தான்.
மன்னிக்கும் மனம் பெறுவது எப்படி?
இதற்கான பாடங்களை இன்றைய முதல் (காண். சீஞா 27:30-28:7) மற்றும் இரண்டாம் (காண். உரோ 14:7-9) வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன. கடவுளிடமிருந்து நாம் இரக்கம் பெற வேண்டுமென்றால் ஒருவர் மற்றவருக்கு இரக்கத்தைக் காட்ட வேண்டும் எனவும், கடவுளிடமிருந்து நாம் மன்னிப்பைப் பெற வேண்டுமென்றால் ஒருவர் மற்றவரை மன்னிக்க வேண்டும் எனவும் சொல்கின்ற சீராக்கு மன்னிப்பதற்கு எளிதான வழியைக் கற்றுக்கொடுக்கின்றார்.
நாம் மற்றவரை மன்னிக்கத் தடையாக இருப்பது எது தெரியுமா? நம் நினைவுதான்.
அதாவது, அடுத்தவர் நமக்கு இழைத்த தவறு நம் மனதில் நீங்காமல் நினைவாகப் பதிவாகிவிடும்போது நம்மால் அடுத்தவரை மன்னிக்க முடிவதில்லை. இதற்கு மாற்றாக சீராக்கு நினைவு முழுவதும் மற்றதைக் கொண்டு நிரப்பிவிட்டால் அடுத்தவரின் தவற்றை நினைவுகூர நமக்கு நேரமும் இடமும் இல்லை என்கிறார்.
அந்த மற்றது எது?
நான்கு: (அ) நம் முடிவு, (ஆ) நம் சாவு, (இ) கடவுளின் கட்டளைகள், (ஈ) கடவுளின் உடன்படிக்கை.
அ. நம் முடிவை நினைவில் கொள்ள வேண்டும்
தொடங்கியது எல்லாம் முடிய வேண்டும் என்பது இயற்கையின் நியதி. நம் தொடக்கம் எப்படி நம் கையில் இல்லையோ அதுபோலவே நம் முடிவும் நம் கையில் இல்லை. அப்படி இருக்க நாம் எதற்காக மற்றவர்களின் தவறுகளையும், அவர்கள் இழைத்த காயங்களையும் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும். எல்லாரையும், எல்லாவற்றையும் ஒருநாள் இறக்கிவைக்க வேண்டும். அப்படி இருக்க ஏன் எல்லாரையும், எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டே செல்ல வேண்டும்.
ஆ. நம் இறப்பை நினைவில் கொள்ள வேண்டும்
இறப்புக்குப் பின் ஒருவேளை வாழ்வு இருப்பதாக வைத்துக்கொள்வோம்(!). சீராக்கின் காலத்தில் இந்த சிந்தனை இல்லை. அந்த வாழ்வை அடைய நாம் தூய்மையாக இருக்க வேண்டும். மன்னிக்காத மனம் தூய்மையாக இருப்பதில்லை. இறப்பு நமக்கு எப்போது வரும் என்பது நமக்குத் தெரியாது. ஆக, எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றால் தூய்மையான மன்னிக்கின்ற உள்ளம் அவசியம்.
இ. கடவுளின் கட்டளைகளை நினைவில் கொள்ள வேண்டும்
இங்கே 'கட்டளைகள்' என்று சொல்லப்படுவது மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவராகிய கடவுள் வழங்கிய 'பத்துக்கட்டளைகளே.' இந்த பத்துக்கட்டளைகளில் 'மன்னிப்பு' என்ற வார்த்தை அல்லது 'கட்டளை' இல்லை என்றாலும், இந்தப் பத்துக்கட்டளைகளைக் கடைப்பிடித்தால் மன்னிப்புக்கான தேவையே இல்லாமல் போய்விடுகிறது.
ஈ. கடவுளின் உடன்படிக்கையை நினைவில் கொள்ள வேண்டும்
'நாம் உங்கள் கடவுளாய் இருப்போம். நீங்கள் எம் மக்களாய் இருப்பீர்கள்' என உடன்படிக்கை செய்தார் கடவுள். நாம் சேர்ந்து இருக்கும்போதுதான் கடவுள் நம் கடவுளாய் இருக்கிறார். சேர்ந்து இருப்பதற்கு மன்னித்தல் அவசியமான ஒன்று.
இவ்வாறாக, இந்த நான்கு நினைவுகூர்தல்கள் வழியாக மன்னிப்பு சாத்தியம் என்பதை உணர்த்துகிறார் சீராக்கு.
உ. அனைவரும் கிறிஸ்துவுக்குள்
இதைத் தொடர்ந்து தூய பவுலடியாரும் உரோமை நகர திருச்சபைக்கு எழுதுகின்ற அறிவுரைப் பகுதியில், 'நாம் இருந்தாலும், இறந்தாலும் கிறிஸ்துவுக்குள்ளே இருக்கிறோம்' என்கிறோம். அதாவது, நாம் உறவு நிலைகளில் இருந்தாலும், இறந்தாலும் கிறிஸ்துவே இணைக்கின்றார் அனைவரையும். ஆகையால்தான், தூய அகுஸ்தினாரும் நாம் வைத்திருக்கும் உறவுகளை எல்லாம் கடவுளில் அன்பு செய்ய வேண்டும் என்கிறார். அப்படி அன்பு செய்யும் போது எந்தவொரு எதிர்மறையான நிலைகளுக்கும் அங்கே இடமில்லாமல் போய்விடுகிறது.
இப்படியாக, இந்த ஐந்து நிலைகளில் நாம் மன்னிப்பின் அவசியத்தை உணர்ந்துகொள்ள முடியும்.
சரி.
மன்னித்தால் என்ன நடக்கிறது?
அ. நாம் மன்னிக்காதபோது இறந்த காலத்தில் வாழ்கின்றோம். நம் காயத்தில் வாழ்கின்றோம். சில நேரங்களில் மன்னிக்காத நாம் கஷ்டப்படுவோம். தவறு செய்த மற்றவர் ஜாலியாக இருப்பார். ஆக, அடுத்தவர் செய்யும் தவறுக்கு நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும்? மன்னித்துவிடுவோம்.
ஆ. மன்னிக்கும் உள்ளம் இருந்தால் நன்றாக தூக்கம் வரும். மன்னிக்காத போது பழிவாங்குதல் எண்ணம் வரும். பழிவாங்குதல் எண்ணம் கோபத்தைத் தூண்டும். கோபம் வெளிப்பட முடியாதபோது அது விரக்தியாக அல்லது இயலாமையாக மாறும். அந்த இயலாமை நம்மேல் நமக்குக் கோபத்தை வருவிக்கும். இப்படி குழப்பமான உள்ளம் இருக்கும் இடத்தில் உடலும் கஷ்டப்படும். தூக்கம் வராது. மன்னிப்பின் கனி தூக்கம்.
இ. மன்னிக்கும்போது நாம் அரசனாகின்றோம். அதாவது சமநிலையில் இருந்து மேல் நிலைக்கு உயர்கின்றோம். நம் நிலையை அல்லது கான்ஃபிடன்ஸ் லெவலை உயர்த்துவது மன்னிப்பு.
நிற்க.
கடைசியா அரசனுக்கு ஒரு கேள்வி.
அரசரே, உங்ககிட்ட நிறைய பணம் இருக்கு. அதனால, நீங்க 10000 தாலந்து என்ன, 10 லட்சம் தாலந்தையும் மன்னிப்பீங்க. ஏன்னா அது உங்க காசு இல்லைல. எவனோ ஒருவன் சம்பாதிச்ச காசு தான.
ஆனா, உங்க பணியாளன் எக்ஸ் ஏதோ ஒருவகையில் உங்ககிட்ட கடன் வாங்கி, இப்போ அதையும் இழந்து நிற்கிறான். இப்ப இவன் உழைத்து சம்பாதித்த 100 தெனாரியத்தை (100 நாள் கூலியை) சக பணியாளன் ஒய்க்கு கடன் கொடுக்கிறான். வாங்கியதும் போச்சு. உள்ளதும் போச்சு என்றால் இவன் என்ன செய்வான்? அடித்துத்தானே வாங்கணும். இது இவன் உழைத்த காசு அல்லவா?
ஆக, இன்னொருத்தன் காசை அல்லது நான் உழைக்காத காசை மன்னித்துவிடுவது எளிது. நான் உழைத்த காசை மன்னிப்பது கடினம்.
அரசன் உழைப்பதில்லை. ஆக, மன்னிப்பது எளிது.
பணியாளன் உழைத்தான். ஆக, மன்னிப்பது கடினம்.
நிற்க.
|