யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2022-03-06

(இன்றைய வாசகங்கள்: இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 26:4-10,பதிலுரைப்பாடல்: திபா: 91: 10-15,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10:8-13,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:1-13)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

“அவர்கள் என்னை நோக்கி மன்றாடும் போது அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்.”

கடவுளுக்குரியவர்களே, மீட்பளிக்கும் கடவுளின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மனமாற்றத்திற்கு தூண்டும் காலமாகிய தவக்காலத்தின் முதல் ஞாயிறை நாம் இன்று சிறப்பிக்கின்றோம். உலகப் பொருட்களால் ஏற்படும் சோதனைகளுக்கு மயங்காமல், கடவுளுக்கு முழுமனதோடு பணிபுரிய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு திருமுழுக்கு பெற்று, தன் பணிவாழ்வைத் தொடங்கும் முன் பாலை நிலத்தில் தனித்திருந்து இறைவனோடு உறவாடினார். அவ்வேளையில் அலகை அவரை சோதித்தபோது, கடவுளில் முழு நம்பிக்கை கொள்ளும் வழியை நமக்கு காட்டினார். அலகையின் தந்திர மொழிகளில் ஏமாறாமல், அந்த சோதனைகளை இயேசு வெற்றி கொண்டார். அவரைப் பின்பற்றி கடவுளுக்கு எதிராக நம் வாழ்வில் வரும் சோதனைகளை முறியடிக்கும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களினத்தின் விசுவாச அறிக்கை.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 26:4-10

மோசே மக்களை நோக்கிக் கூறியது, முதற்பலன் நிறைந்த கூடையை குரு உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார். நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: 'நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அன்னியராய் இருந்தார். ஆனால் அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார். எகிப்தியர் எங்களை ஒடுக்கினார்: துன்புறுத்தினர்: கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர். அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார். தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டிவந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார். எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன் ' என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும் ஆண்டவரே.
பதிலுரைப்பாடல்: திபா: 91: 10-15

உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். ஆண்டவரை நோக்கி, ;நீரே என் புகலிடம்: என் அரண்: நான் நம்பியிருக்கும் இறைவன் ; என்று உரைப்பார். பல்லவி

ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது: வாதை உம் கூடாரத்தை நெருங்காது. நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். பல்லவி

உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வர். சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்: இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன்பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். பல்லவி

'அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்: அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்: அவர்கள் என்னை நோக்கி மன்றாடும் போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்: அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்: அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்: பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவில் விசுவசிக்கிறவனுக்குரிய விசுவாச அறிக்கை.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10:8-13

சகோதரர் சதோதரிகளே, மறைநூலில் சொல்லியிருப்பது இதுவே: 'வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது: உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது. ' இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும். ஏனெனில், 'இயேசு ஆண்டவர் ' என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்: வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், 'அவர் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார் ' என்பது மறை நூல் கூற்று. இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை: அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். 'ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர் ' என்று எழுதியுள்ளது அல்லவா?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மத் 4: 4bm
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:1-13

அக்காலத்தில் இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார். அப்பொழுது அலகை அவரிடம் , ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும் ' என்றது. அதனிடம் இயேசு மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார். பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி, அவரிடம், 'இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன: நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும் ' என்றது. "இயேசு அதனிடம் மறுமொழியாக, ''உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக"" என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்." பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, 'நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்: 'உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் ' என்றும் 'உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றது. "இயேசு அதனிடம் மறுமொழியாக, 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே " என்றார். அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எங்கள் மூதாதையரின் கடவுளாகிய இறைவா!

நீரே என் புகலிடம், என் அரண், நான் நம்பியிருக்கும் இறைவன், எனும் நம்பிக்கையுடையோராய் வாழ, திரு அவைச் சமூகத்தை அருளின் மனமாற்ற, தவக்காலத்தினுள் வழிநடத்திச் செல்லும், திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலைப் பணியோர் அனைவரையும் தூய ஆவியினால் ஆசீர்வதித்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நலமளிக்கும் இறைவா!

புதிய தொற்று நோயின் தாக்கத்திலிருந்து உம் மக்களை காப்பாற்றும். குழப்பமான இந்நேரத்தில் மருத்துவருகளுக்கு ஞானத்தை கொடுத்து அவர்கள் மக்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கவும், மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளிலிருந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஆற்றல் வழங்கும் இறைவா,

சோதனைகளை வெல்வதற்கு இயேசுவுக்கு வலிமை தந்தீரே, உம்மைப் போற்றுகிறோம். எங்களை சோதனையில் விழவிடாதேயும். சோதனை வேளைகளில் இயேசுவைப்போல இறைமொழி கொண்டு வெற்றி பெற வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மீட்பு அளிப்பவராம் இறைவா,

உமது திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்து வாழியாக நீர் அளித்த மீட்பை, உலக மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு நாடித் தேடி பெற்றுக்கொள்ள உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஒளியான எம் இறைவா!

இளைஞர், இளம்பெண்கள் தங்கள் வாழ்வில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலகச் சிற்றின்பங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உமது மகன் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் நிலைவாழ்வுப் பெறுவர் என்ற வாக்களித்த எம் இறைவா!

எங்கள் நம்பிக்கை இறை இயேசுவில் நிலைப்பெற்று, எம் வாழ்வு ஏற்றம் பெறவும், அதனால் நாங்கள் உம் இறையரசின் சாட்சிகளாய் ஒளிர்ந்திடவும், அடுத்திருக்கும் எம் மக்களையும் இறையரசில் இணைத்திட உழைக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

புத்துயிர் கொடுப்பவராம் இறைவா,

தங்கள் மீட்புக்காக உம்மை நோக்கி கூக்குரல் எழுப்பவும், உமது அருளின் உயிரைப் பெற்றவர்களாய் கிறிஸ்துவின் மரணம், உயிர்ப்பு ஆகியவை வழியாக நீர் அளிக்கும் மீட்பை சுவைத்து மகிழவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஆற்றல் தருபவராம் இறைவா,

இவ்வுலகில் எழும் பலவித சோதனைகளால் வாழ்வின் நோக்கத்தை மறந்து திசைமாறி அலையும் மனிதகுலத்துக்கு, உமது அருள் ஒளியால் தீமைகளை வென்று விண்ணக வாழ்வை உரிமையாக்கும் ஆற்றலைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

இயேசுவின் சோதனைகள் !

நமக்கு நன்கு அறிமுகமான இயேசுவின் மூன்று சோதனைகளையும், அந்த சோதனைகளிலிருந்து இயேசு எப்படி மேற்கொண்டார் என்பதையும் இன்று திருச்சபை நமக்கு சிந்தனைப் பொருளாகத் தருகிறது. மனிதராகப் பிறந்த அனைவரும் சோதனைக்குட்பட வேண்டும் என்று காட்டத்தான், பாவமே அறியாத இறைமகனாம் இயேசுவும் சோதனைகளைச் சந்திக்க முன்வந்தார். உடல் தேவைகளை நிறைவு செய்தல், உலகப் பொருள்கள்மீது பற்றுகொள்தல், இறைவனுக்கு எதிராகச் செயல்படுதல் என்னும் மூன்று தளங்களில் இயேசு சோதிக்கப்பட்டார். நமக்கும் இந்த மூன்று தளங்களிலும் சோதனைகள் எழும்.

இச்சோதனைகளை வெல்ல இயேசு கையாண்ட ஆயுதம் என்ன? இறைவார்த்தைதான்! மூன்று சோதனைகளிலும் அவர் மறைநுhலை மேற்கோள் காட்டினார். அந்த வார்த்தைகளைச் செயல்பாடாக்கினார். இவ்வாறு, தந்தை இறைவன்மீது அவருக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார். நாமும் நமது சோதனைகளை வெல்ல இந்த மூன்று உத்திகளையும் பயன்படுத்துவோம். இறைவார்த்தையைக் கொண்டும், இறைநம்பிக்கையைக் கொண்டும் நம் சோதனைகளை வெல்வோமாக!

மன்றாட்டு:

ஆற்றல் வழங்கும் இறைவா, சோதனைகளை வெல்வதற்கு இயேசுவுக்கு வலிமை தந்தீரே, உம்மைப் போற்றுகிறோம். எங்களை சோதனையில் விழவிடாதேயும். சோதனை வேளைகளில் இயேசுவைப்போல இறைமொழி கொண்டு வெற்றி பெற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.