திருவழிபாடு ஆண்டு - C 2022-11-06
(இன்றைய வாசகங்கள்:
மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-2, 9-14,திருப்பாடல்கள் 17: 1. 5-6. 8,15,திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 16 - 3: 5,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-38)
திருப்பலி முன்னுரை
உயிர்ப்புக்குரியவர்களே, பொதுக்காலத்தின் முப்பதிரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். உயிர்த்த ஆண்டவரின் சீடர்களாகிய நாம் அனைவரும் உயிர்த்தெழுதலின் மக்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இவ்வுலக வாழ்வில் அதிக ஆர்வம் காட்டாமல், மறுவுலக வாழ்வுக்குரியவற்றில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள இயேசு நம்மை அழைக்கிறார். இறைவன் தரும் நிலை வாழ்வை நமது சந்தேகங்களாலும், பொறுப்பற்ற நடத்தையாலும் இழந்துவிடாதவாறு நாம் எச்சரிக்கப்படுகிறோம். நாம் உயிர்ப்பின் மக்களாய், வானதூதரைப் போன்று பேரின்ப வாழ்வில் பங்குபெறத் தயாராகுமாறு அழைக்கப்படுகிறோம். இயேசுவின் அழைப்புக்கு கீழ்ப்படிந்து, வாழ்வோரின் கடவுள் தரும் நிலைவாழ்வுக்கு நம்மைத் தயார் செய்ய வரம் வேண்டி இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்.
மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-2, 9-14
அந்நாள்களில் சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப் பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப் படுத்தப்பட்டார்கள்.
அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில், ``நீ எங்களிடமிருந்து கேட்டறிய விரும்புவது என்ன? எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதை விட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்'' என்றார்.
தாம் இறுதி மூச்சு விடும் வேளையில், ``நீ ஒரு பேயன். நீ எங்களை இம்மை வாழ்வினின்று அகற்றிவிடுகிறாய். ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்; ஏனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே'' என்று கூறினார்.
அவருக்குப் பிறகு மூன்றாமவரை அவர்கள் கொடுமைப் படுத்தினார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனடியாகத் தம் நாக்கையும் கைகளையும் அவர் துணிவுடன் நீட்டினார்; ``நான் இவற்றை விண்ணக இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டேன்; அவருடைய சட்டங்களுக்காக நான் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவரிடமிருந்து மீண்டும் இவற்றைப் பெற்றுக்கொள்வேன் என நம்புகிறேன்'' என்று பெருமிதத்தோடு கூறினார்.
அவர் தம் துன்பங்களைப் பொருட்படுத்தவில்லை. எனவே மன்னனும் அவனோடு இருந்தவர்களும் இந்த இளைஞரின் எழுச்சியைக் கண்டு வியந்தார்கள். அவரும் இறந்தபின் நான்காமவரையும் அவர்கள் அவ்வண்ணமே துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினார்கள்.
அவர் இறக்கும் தறுவாயில், ``கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன். ஆனால் நீ வாழ்வு பெற உயிர்த்தெழ மாட்டாய்'' என்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
விழித்தெழும்போது, ஆண்டவரே உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.
திருப்பாடல்கள் 17: 1. 5-6. 8,15
1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். பல்லவி
5 என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. 6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும். பல்லவி
8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். 15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். பல்லவி
இரண்டாம் வாசகம் நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை ஆண்டவர் உறுதிப்படுத்துவாராக! திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 16 - 3: 5சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக! சகோதரர் சகோதரிகளே, இறுதியாக எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற்றது. அதுபோல அது எங்கும் பரவிப் புகழ் பெறவும், தீயோர், பொல்லாதவர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படவும் வேண்டுங்கள்; ஏனெனில் நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை.
ஆனால் ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார். நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் செய்கிறீர்கள்; இனியும் செய்வீர்கள் என்னும் உறுதியான நம்பிக்கையை ஆண்டவர் எங்களுக்குத் தருகிறார்.
கடவுளின் அன்பையும், கிறிஸ்துவின் மன உறுதியையும் அடைய ஆண்டவர் உங்கள் உள்ளங்களைத் தூண்டுவாராக!
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-38
அக்காலத்தில் உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, ``போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார்.
இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?'' என்று கேட்டனர்.
அதற்கு இயேசு சதுசேயரிடம், ``இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்துகொள்வதில்லை. இனி அவர்கள் சாக முடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, `ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கூறியிருக்கிறார்.
வர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எம் ஆயரே இறைவா, உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தங்கள் பணியின் மேன்மையை உணர்ந்தவராய், மக்களை மனமாற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்ல அருள்புரிய உம்மை மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே எம் இறைவா! உக்ரைன் ரஷ்யா போர் விரைவில் முடிவு பெறவும்; அமைதியான சூழல் ஏற்படவும், போரின் பாதிப்புக்கள் விரைவில் சீரடையவும், வன்முறைகள் முற்றுப்பெறவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா! போரினால் பலவித இழப்புக்களைச் சந்திக்கின்ற மக்களை ஒப்புக்கொடுக்கின்றோம். அன்பான மனிதர்களை, உடல் உறுப்புக்களை, உடமைகளை, நிம்மதியை, மன மகிழ்ச்சியை, வேலைகளை இன்னும் பலவற்றை இழந்து தவிப்போருக்கு ஆறுதலாகவும்; ஆதரவாகவும் நீரே இருக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நல் ஆயனே! எம் இறைவா! கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது சண்டைகளை விடுத்து அமைதிப் பேச்சு வார்த்தைகளில் தீர்வு காணவும், மக்களின் அமைதியான வாழ்வையும், நலனையும் குறித்து அக்கறை கொள்ளவும், எங்கள் தலைவர்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
இரக்கத்தின் ஊற்றே எம் இறைவா! இறந்து போன அனைத்து ஆத்மங்களையும் உமது இரக்கத்துடன் கண்ணோக்கியருளும். அவர்கள் குற்றங்களை பொறுத்து அல்ல, மாறாக உமது பேரன்பிற்கேற்ப இரக்கம் வைத்தருளும். இதனால் அவர்கள் அனைவரும் உமது வான்வீட்டை அடைந்து, உமது அன்பு பிரசன்னத்தில் இளைபாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நம்பிக்கை தருபவரே இறைவா, வறுமை, கடன், முதுமை, பசி, தனிமை, நோய் என பல்வேறு விதங்களில் துன்புறும் மக்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களின் துயரத்தை நீக்கி ஆறுதல் அளித்திட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
இறைவா! மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உதவி செய்பவரே இறைவா, எம் இளைஞர்களுக்காக உம்மை மன்றாடுகின்றோம். இவர்கள் கடவுளின் பிள்ளைகளாய் நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதிபெறவும்,ஞானத்தோடு அனைத்தையும் செய்து முடிக்கவும், தீமைகளிலிருந்து விலகி உம்முடைய சாட்சிகளாய் அவர்கள் வாழ அவாகளை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|