யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2024-01-14

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் (1சாமு.3:3-10,19),திருப்பாடல்கள் 40,2,3,6-9,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1 கொரி 6:13-15,17-20),யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:35-42))




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம் பக்கம் சாய்ந்து நமது மன்றாட்டைக் கேட்டருளும் நம் இறைவனின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இன்று பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

சுதந்திரத்தையும், சுயாதீனத்தையும் தரும் நம் கடவுள், தம் விருப்பத்தை நிறைவேற்ற நம்மை அழைக்கின்றார். அவருடைய விருப்பமும், அழைப்பும் நம்மை அடிமையாக்குவதல்ல: மாறாக அமைதியும், உடல் நலமும், பாதுகாப்பும் நிறைந்த வாழ்வில் நடக்க வைப்பது. உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? என்னும் இறைவார்த்தைகள் நம் உடலை அழகு சாதனப் பொருட்களாலும், நறுமண தைலங்களாலும் அல்ல, இறைவனுக்குகந்த தூய வாழ்வினால் மேன்மைப்படுத்த வேண்டும் என்னும் தெளிவானதும், ஆழமானதுமான ஒரு அழைப்பை நமக்கு இன்று தெரிவித்து நிற்கின்றன. பெற்றோர்கள், ஆசான்கள் இறைவனுக்குள் வாழ்ந்தால்தான், பிள்ளைகளுக்கும், மாணவர்களுக்கும் நல்வழி காட்டமுடியும் என்னும் செய்தியை ஏலியினுடைய செயற்பாடு நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இறைவனுக்குள் வாழும் அனுபவம் இருந்ததால்தான் யோவானும் இயேசுவை இனங்கண்டு மற்றவர்களுக்கு அடையாளம் காட்டினார் எனவே சாமுவேலைப் போல ஆண்டவரே பேசும் உம் அடியேன் கேட்கிறேன்: என்னும் முழுமையான அர்ப்பணத்தோடு ஆண்டவர் விரும்புவதை நிறைவேற்றி, நம் உடலால் கடவுளுக்குப் பெருமை சேர்ப்போம். அவரின் வெளிப்பாட்டை அறிந்து அவர் வழி செல்ல ஞானத்தையும், அருளையும் வேண்டி இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

‘ஆண்டவரே பேசும் அடியேன் கேட்கிறேன்’
இறைவாக்கினர் சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் (1சாமு.3:3-10,19)

அந்நாள்களில் கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தான். அப்பொழுது ஆண்டவர், ‘சாமுவேல்’ என்று அழைத்தார். அதற்கு அவன், “இதோ! அடியேன்” என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, “இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர், “நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்” என்றார். அவனும் சென்று படுத்துக்கொண்டான். ஆண்டவர் மீண்டும் ‘சாமுவேல்’ என்று அழைக்க, அவன் எழுந்து ஏலியிடம் சென்று, “இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அவரோ, “நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக் கொள்” என்றார். சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. மூன்றாம் முறையாக ஆண்டவர், ‘சாமுவேல்’ என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று, “இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்து கொண்டார். பின்பு ஏலி சாமுவேலை நோக்கி, “சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, ‘ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று பதில் சொல்” என்றார். சாமுவேலும் தன் இடத்திற்குச் சென்று படுத்துக்கொண்டான். அப்போது ஆண்டவர் வந்து நின்று, ‘சாமுவேல், சாமுவேல்’ என்று முன்புபோல் அழைத்தார். அதற்குச் சாமுவேல், ‘பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று மறுமொழி கூறினான். சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.
திருப்பாடல்கள் 40,2,3,6-9

2 அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக் கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கி எடுத்தார்; கற்பாறையின் மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். 3 புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். - பல்லவி

6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7a எனவே, ‘இதோ வருகின்றேன்.’ - பல்லவி

7b என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். - பல்லவி

9 என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி

இரண்டாம் வாசகம்

உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1 கொரி 6:13-15,17-20)

சகோதர சகோதரிகளே, உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர். ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார். உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார். எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர். உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! யோவா 1: 41, 17b
அல்லேலூயா, அல்லேலூயா! மெசியாவை, அதாவது அருள்பொழிவு பெற்றவரைக் கண்டோம். அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:35-42)

யோவான் தம் சீடர் இருவருடன் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் செம்மறி” என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்றார். ‘மெசியா’ என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி ‘கேபா’ எனப்படுவாய்” என்றார். ‘கேபா’ என்றால் ‘பாறை’ என்பது பொருள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஆசீரும் அருளும் நிறைந்த அன்புத் தந்தையே இறைவா!

உமது பிரதிநிதிகளாக இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் மக்களுக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும்: உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் புளிக்காரமாகவும் இருந்து பணியாற்ற வேண்டிய பலத்தையும் உடல் நலத்தையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் பக்கம் சாய்ந்து எமது மன்றாட்டைக் கேட்டருளும் இறைவா!

பெற்றோர்கள், ஆசான்கள் உமக்குள்என்றும் வாழ்ந்து, பிள்ளைகளுக்கும், மாணவர்களுக்கும் நல்வழி காட்டவும், உமக்காகப் பொறுமையுடன் காத்திருந்து, உமது திருவுளத்தை நிறைவேற்றிடவும் தேவையான அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அரசருக்கெல்லாம் அரசரே எம் இறைவா!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும், துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் , நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆசியும், நல்வாழ்வும் தருகின்ற தந்தையே!

பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், கண்ணீரோடும் வாழும் அனைத்து குடும்பங்கள்மீதும் மனமிரங்கி அவர்கள் உண்மையான மன மாற்றம் பெற்று, கணவன், மனைவி ஆகியோர் ஒப்புரவாகி திருக்குடும்பமாகிய அன்னை மரியா, தூய யோசேப்பு, இயேசு ஆகியேரைப் பின்பற்றி வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உயர்களுக்கு உயிர் கொடுக்கம் அன்புத் தந்தையே!

நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையின் உருவே இறைவா!

நாங்கள் ஏழை எளிய மக்கள் மேல் அன்பு கொண்டு வாழவும், அவர்களின் தேவைகளில் உடனிருக்கவும், பிறரின் துன்பங்களைத் தன் துன்பங்கள் போல் ஏற்று வாழவும் வரமருள வேண்டும் என்று மன்றாடுகிறோம்.

துன்பத்தில் ஆறுதல் தரும் இறைவா!

நோயினால் அவதிப்படுகின்ற உம் மக்களைக் கண்ணோக்கிப்பாரும். நீர் அவர்களின் துன்பத்தில் ஆறுதலாக இருந்து, நோயிலிருந்து விடுதலை கொடுக்கவும் வேண்டிய அருளைப் பொழிய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

மெசியாவைக் கண்டீர்களா?

இயேசுவோடு தங்கியிருந்து அவரது அன்பையும், ஆற்றல்மிகு வாக்குகளையும் சுவைக்கும் அனுபவம் பெற்ற அந்திரேயா தமது சகோதரர் சீமோனிடம் வந்து சொன்ன நற்செய்தி "மெசியாவைக் கண்டோம்" என்பது. வாழ்வு மாற்றம் நிகழ்த்தும் தியானக்கூட்டங்களில் கலந்துகொண்டு பயன்பெற்ற பலரும் திரும்பி வந்து, அண்டை அயலாரை அழைத்து, "நீங்களும் அந்த தியானத்தில் கலந்துகொள்ளுங்கள்" என்று ஊக்கமூட்டும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. இவை மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி அறிவிப்பு அனுபவங்கள். ஆனால், பெரும்பான்மை கத்தோலிக்கர் "மெசியாவைக் கண்டோம்" என்று பிறரிடம் ஆர்வத்துடன் சொல்ல இயலுவதில்லை, காரணம் இந்த "மெசியா அனுபவம்" அவர்களுக்குக் கிடைப்பதில்லை. தியானங்கள், திருப்பயணங்கள், குணமளிக்கும் நிகழ்வுகள், நற்செய்திக் கூட்டங்கள், அறப்பணி சேவைகள்... இப்படி ஏதாவது ஒரு வகையில் நம்மவர்கள் அனைவரும் "மெசியா அனுபவம்" பெறவேண்டும். அதற்கான வாய்ப்புகளை பங்குத் தந்தையர், அன்பியப் பொறுப்பாளர்கள், பக்த சபையினர் ஏற்படுத்தித் தரவேண்டும். "இயேசு அனுபவம்" இல்லாத கிறித்தவ வாழ்வு சாறற்ற சக்கைவாழ்வு என்பதை உணர்வோம். எல்லாரும் இறையனுபவத்தைத் தேடிப்பெற ஊக்குவிப்போம்.

மன்றாட்டு:

அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களுக்கு ஆழ்ந்த இறையனுவத்தைத் தரவும், அந்த அனுபவத்தைப் பெற்றபின், பிறரை அந்த அனுபவத்துக்குள் அழைத்துவரவும் தேவையான ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.