இரண்டாவது திருவழிபாடு ஆண்டு 2024-04-14
(இன்றைய வாசகங்கள்:
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 13-15, 17-19, திருப்பாடல் 4: 1. 6. 8,திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5
,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 35-48)
திருப்பலி முன்னுரை
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக" இன்று பாஸ்காக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு.
அன்பிற்கினியவர்களே! இன்று இயேசுவின் உயிர்ப்பின் மையச் செய்தி ‘அமைதி’. இயேசு இறந்துவிட்டார், எல்லாம் இழந்துவிட்டோம் என்ற ஏமாற்றத்தோடு வாழ்ந்த சீடர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பு தந்தது அமைதி. எல்லாவற்றையும் விட்டு விட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தோமே, இப்பொழுது தனிமையில் தத்தளிக்கின்றோமே என்று வருந்திய சீடர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பு தந்தது அமைதி. இயேசுவோடு மூன்று ஆண்டுகள் பயணித்து இயேசுவைப் பிரிந்து மூன்று நாட்களாக அச்சத்தோடு பயந்து நடுங்கி இனி நமக்கு என்ன நடக்குமோ என்று கதிகலங்கிய சீடர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பு தந்தது அமைதி.
ஆம் அன்பு சகோதரமே!
இதோ! இங்கு கூடியிருக்கின்ற நாமும் ஏதோ ஒருவித பயத்தோடும், நம்பிக்கையிழந்த அச்சத்தோடும் தினமும் போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்றைய திருவழிபாட்டின் வழியாக, அஞ்சாதீர்கள், உங்களுக்கு அமைதி உரித்தாகுக! என்ற மகிழ்ச்சி தரும் நற்செய்தியை இறைவன் நமக்கு தருகின்றார். நம் இயேசு, அச்சத்தை அகற்றி அமைதி தர வந்தவர். பயத்தைப் போக்கி பலத்தை தர வந்தவர். ஏமாற்றத்தைப் ஏணியாக மாற்றி ஏற்றம் தர வந்தவர். எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றி தர வந்தவர். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் நம்முடன் நடந்திட துடிப்பவர். இயேசுவின் அமைதியை நம் வாழ்வினில் அனுபவிக்க இக்கல்வாரி பலியினில் நம் போராட்டங்களை, நாம் பயந்து பரிதவிக்கும் நிகழ்வுகளை, நம் வாழ்வினை குறித்த அச்சங்களை ஒப்புக்கொடுப்போம். இயேசுவின் நிலையான அமைதி நம்மை ஆட்கொள்ள ஜெபிப்போம்.
முதல் வாசகம்
வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 13-15, 17-19
அந்நாள்களில் பேதுரு மக்களை நோக்கிக் கூறியது: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர் இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள். நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டீர்கள். வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்.
ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள்.
அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத் தெரியும்.
ஆனால் கடவுள், தம் மெசியா துன்புற வேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார். எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம் மாறி அவரிடம் திரும்புங்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும் ஆண்டவரே.
திருப்பாடல் 4: 1. 6. 8
எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும். பல்லவி
6 `நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?' எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும். பல்லவி
8 இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாய் இருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர். பல்லவி
இரண்டாம் வாசகம் நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே. திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5
என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து.
நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே. அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்துகொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும்.
``அவரை எனக்குத் தெரியும்'' எனச் சொல்லிக்கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது.
ஆனால் அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துகொள்ளலாம்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய இயேசுவே, மறைநூலை எங்களுக்கு விளக்கியருளும். நீர் எம்மோடு பேசும்போது எம் உள்ளம் பற்றி எரியச் செய்தருளும் அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 35-48
அக்காலத்தில் சீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று அவர்களை வாழ்த்தினார்.
அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.
அதற்கு அவர், ``நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே'' என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள்.
அப்போது அவர் அவர்களிடம், ``உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?'' என்று கேட்டார்.
அவர்கள் வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.
பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ``மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே'' என்றார்; அப்போது மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய மனக் கண்களைத் திறந்தார்.
அவர் அவர்களிடம், `மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், ``பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது.
இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
இரக்கத்தின் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் உம்பால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்கள் என்பதனை உணர்ந்து, தங்கள் முழு ஆற்றலோடு உமது பணியைச் செவ்வனே செய்ய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
ஆசீர்வதிக்கும் இறைவா! நம் மூதாதையரான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு கடவுளைப் பெருமைப்படுத்தியது போல, நாமும் உம்மை வாழ்வில் ஏற்று, உம்மோடு இணைந்து, உமக்கு உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டிய அருளைத் தந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
அமைதியின் இறைவா! இன்றைய சமூகத்தில் சாதி, மதம், இனம், மொழி மற்றும் நிற வேறுபாடுகளைக் களைந்து, நீர் ஏற்படுத்திய அமைதியின் பாதையில் நாங்கள் வாழ வேண்டிய வரங்களைத் தந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
மன்னிக்கும் இறைவா! பாவ வாழ்க்கையினால் உம்மை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் உமது ஒளியை வீசி பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெற வேண்டிய அருளைப் பொழிய வேண்டுமென்று மன்றாடுகிறோம்
அரவணைக்கும் இறைவா! தங்களை இளம் வயதில் இறைப்பணிக்காக அர்ப்பணித்து, உமது பணியினை மேற்கொள்ளும் இறைப்பணியாளர்களின் முதிர்ந்த வயதில் தகுந்த பாதுகாப்பும். அன்பும், பராமரிப்பும், உடலுள்ள சுகமும் கிடைத்திட செய்ய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே இறைவா! உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அமைதியின் தேவனே இறைவா! இயேசு தம் சீடருக்கு வழங்கிய அதே அமைதியை நாங்கள் ஒவ்வொருவரும், மற்றும் உலக மக்கள் ஒவ்வொருவரும் பெற்று மகிழ்ந்திடவும் அனைத்துக் குடும்பங்களிலும் அமைதி, ஒற்றுமை வளர்ந்தோங்கிடவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
வழிநடத்தும் இறைவா! இன்று திருஅவை கொண்டாடும் இறை இரக்கத்தின் நாளின் மேன்மையை உணர்ந்தவர்களாக பிறர்மீது இரக்கம் வைத்து, அன்பு செய்து, உதவிகள் செய்து வாழும் மக்களாக எங்களை வழிநடத்த வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!"
இயேசுவின் உயிர்ப்பு பலருக்கும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. பலவித உணர்வுகளுக்கு மத்தியில் அத்தனை திருத்தூதர்களும் பரிதவித்துள்ளர். இன்றைய வாசகப் பகுதியில அவர்களின் பல்வேறு உணர்வுகளும் வெளி ப்படுத்தப்படுகின்றன. திகில், அச்சம், கலக்கம், ஐயம், அமைதி, மகிழ்ச்சி ஆகிய உணர்வை வெளிப்படுத்தும் சொற்றொடர்களும், பாருங்கள், தொடுங்கள், உண்ணுங்கள்,என்னும் சொற்றொடர்கள் வெளிப்படுத்தும் உணர்வுச் செயல்களும் இயேசுவின் உயிர்ப்புக்கு வழங்கும் நிஜ வடிவின் உணர்வுப்பூர்வமரன சான்றுகள்.
இயேசுவின் உயிர்ப்பு அவரது உயிர்புபற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. அவரது உயிர்ப்பு என்பது ஆவி உலக வாழ்வு அல்ல; இவ்வுலகில் வாழும் முழு மனித வாழ்வு; உடலும் ஆவியும் உள்ள வாழ்வு. ஆகவேதான் தொட்டுப் பாருங்கள்என்றார். அவர்களோடு உண்டார். மனிதனின் எல்லா உணர்வுப்பூர்வ சந்தேகங்களுக்கும் தீர்வை வழங்குகிறார் இயேசு. நம்; இறைவன் இயேசு நம் வாழ்வின் சந்தேகங்கள் சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு வழங்குபவர். நம் வாழ்வின் பயம், அச்சம், கலக்கம் இவை அனைத்தையும் அகற்றுவார். நம்மோடு உண்டு உறையாடி நம்மை மகிழ்விப்பவர் நம் இறைவன். அந்த அன்பு தெய்வம் நம்மோடு உண்டு உறையாடிட இடம் கொடுப்போம். நம் கவலை எல்லாம் நீங்கும். அச்சம் அகலும். அமைதி அதிகரிக்கும். இனிது வாழ்வோம்.
மன்றாட்டு:
உயிர்ப்பின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் நம்பிக்கை இன்மையை மன்னித்து, எங்களை ஏற்றுக்கொள்வதற்காக நன்றி. நாங்கள் உமது உயிர்ப்பில், உமது உடனிருப்பில், உமது பிரசன்னத்தில் நம்பிக்கை கொள்ளவும், அதனால், நிலைவாழ்வு அடையவும் அருள்தாரும். ஆமென்.
|