யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2024-06-09

(இன்றைய வாசகங்கள்: தொடக்க நூலிலிருந்து வாசகம் 3:9-15 ,திருப்பாடல் 130: 1-2, 3-4, 5-6, 7-8,திருத்தூதர் பவுல் கொருந்தியருக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்திலிருந்து வாசகம்: 4:13-5:1,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 3:20-35 )




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறையருளால் பொதுக்காலம் 10 ஆம் வாரத் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்கும் இறைவனின் மக்கள் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த வணக்கங்கள் உரியதாகுக. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகிறவரே என் தாயும், சகோதரியும், சகோதரரும் ஆவார் என்று இயேசு சொல்கிறார். இந்த உலகத்திலே நாம் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறோம், நம்முடைய பெற்றோரும் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். கடவுளும் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அந்த திட்டத்தை அறிந்து செயல்படுத்துவதுதான் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது ஆகும். தன் துன்பங்கள் குடும்ப பாரங்கள் அனைத்தையும் இறை திருவுளம் என ஏற்று, இயேசுவைப் பெற்றெடுத்ததைவிட, திருவுளம் நிறைவேற்றியதால் கடவுளின் தாயானாள். நாமும் இவ்வாறு வாழ்ந்தால் இயேசுவின் தாயாக, சகோதர சகோதரிகளாக மாறமுடியும். இவ் உறவைப் பெற்று இனிது வாழ்வோம். மகிழ்வுடன் இப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

"நீ எங்கே இருக்கின்றாய்?"
தொடக்க நூலிலிருந்து வாசகம் 3:9-15

"ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, "நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கேட்டார். " உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்" என்றான் மனிதன். " நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?" என்று கேட்டார். அப்பொழுது அவன் "என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்: நானும் உண்டேன்"என்றான்."ஆண்டவராகிய கடவுள், "நீ ஏன் இவ்வாறு செய்தாய்?" என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், "பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்" என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், "நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டுவிலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய்." "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது.
திருப்பாடல் 130: 1-2, 3-4, 5-6, 7-8

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி

3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். -பல்லவி

5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். 6 விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. -பல்லவி

7 பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! -பல்லவி

இரண்டாம் வாசகம்

"நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்: ஆகவே பேசினேன் "
திருத்தூதர் பவுல் கொருந்தியருக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்திலிருந்து வாசகம்: 4:13-5:1

சகோதரர் சகோதரிகளே, கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், ``அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! யோவா 12: 31b-32
அல்லேலூயா, அல்லேலூயா! ”இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 3:20-35

அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், "இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது " என்றும் "பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் " என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: "சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது: அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்: அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்.ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது " என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார். அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. "அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் " என்று அவரிடம் சொன்னார்கள். அவர் அவர்களைப் பார்த்து, "என்தாயும் என் சகோதரர்களும் யார்? "என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, "இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் " என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அனைத்தையும் படைத்த எம் இறைவா!

உம் திருஅவையின் எல்லா திருப்பணியாளர்களையும் நிறைவாய் ஆசீர்வதித்து, அனைவரும் நீர் விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து ஆற்றிட வேண்டிய வரத்தைப் பொழிந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

நீதியின் அரசரே எம் இறைவா!

நாங்கள் பல்வேறு பாவங்கள் செய்து வாழ்கின்றோம். நீர் எங்கள் பாவங்களை அறிக்கையிடும்போது மன்னிக்கிறீர், நாங்கள் மீண்டும் பாவ வாழ்வில் விழாமல் காத்திட வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

மன்னிக்கும் மாபானே இறைவா!

எங்கள் தவறுகளை எல்லாம் மன்னிப்பவரே நாங்கள் பல தருணங்களில் பாவக் குழியில் விழுந்து நிலை தடுமாறும் போது எங்களைத் தூக்கி நிறுத்தி காத்திட வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

தீய ஆவிகளைக் கீழ்ப்படிய வைத்த எம் இறைவா!

நாங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும் அவர் காட்டிய அன்பு, பரிவு, இரக்கச் செயல்களில் நாங்களும் நிலைத்து நிற்கவும் வேண்டிய அருளைப் பொழிய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

எம்மை மகிழச் செய்யும் தந்தையே எம் இறைவா!

தாழ்ச்சி என்னும் பண்பை எம்மில் வளர்த்து எமது பாவத்தை உணர்ந்து, மனம் வருந்தி மன்னிப்புப் பெற்று புதுவாழ்வு வாழ வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம்.

உமது திருவுடல், திருஇரத்தம் என்னும் கொடைகளுக்காக நன்றி கூறுகிறோம். எங்களை ஆசிர்வதித்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

கருணையின் இறைவா!

கிறிஸ்துவத்திற்கு எதிராய் உலகெங்கும் செயல்படும், மக்களைக் கண்ணோக்கும். அவர்கள் மனமாறி தங்கள் வன்முறையிலிருந்து விடுபட்டு மனிதநேயமுடன் வாழ வேண்டிய நல்மனதினைத் தந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

ஆயனின் கட்டளையை கடைபிடிப்போரிடம் அன்பு நிறைவடைகிறது என உணர்த்தும் ஆயனே!

கடுமையான வார்த்தைகளைப் பேசியதால் மனம் புண்ணாகி அவமானமாக இருக்கிறது. பல்வேறு தொல்லைகள் என்னைப் புண்ணாக்கி வேதனையால் நொந்து போகச் செய்துவிட்டது என மனம் வருந்தும் உள்ளத்தினரை அன்பு நிறைந்த வார்த்தையால் அரவணைக்கவும், உமது திருக்காயங்களுக்குள் பாதுகாப்பாக அவர்கள் வாழவும் அருள் பொழிய, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு, 'கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்' என்றார்'' (மாற்கு 3:35)

இயேசுவின் உண்மையான உறவினர் யார் என்னும் கேள்விக்குப் பதிலை இங்கே காண்கின்றோம். இயேசு புரிந்த அதிசய செயல்களைக் கண்டு, அவருடைய போதனையைக் கேட்டு மக்கள் அவரைச் சூழ்ந்துகொள்கிறார்கள். அப்போது இயேசுவின் உறவினர் அவரை அணுகி, அவரை மக்களிடமிருந்து மீட்டுத் தம்மோடு அழைத்துச் செல்ல நினைக்கிறார்கள். இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரைத் தம்மோடு வருமாறு கேட்டிருக்கக்கூடும். ஆனால் இயேசுவோ கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் கருத்தாய் இருந்தார். எனவே, இயேசுவின் உறவு இரத்த உறவில் தொடங்கி முடிகின்ற இவ்வுலக உறவு அல்ல. இயேசுவின் உறவினர் இயேசுவோடு வேறொரு ஆழ்ந்த உறவால் பிணைக்கப்பட்டுள்ளனர். அதையே இயேசு விளக்கிச் சொல்கிறார். அதாவது, யார் யார் இயேசுவைப் போலக் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்களோ அவர்களே இயேசுவின் உறவினர். இந்த உறவு இரத்த உறவைவிட ஆழமானது. இதிலிருந்து இயேசு தம் தாயோடு தமக்கிருந்த உறவை உதறித்தள்ளினார் என நாம் முடிவுசெய்தால் அது சரியல்ல. மரியா உண்மையில் இயேசுவின் தாய் மட்டுமல்ல, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் மரியா எப்போதுமே கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

மரியாவின் ஆழ்ந்த நம்பிக்கையை இயேசு இங்கே போற்றி உரைக்கிறார் எனலாம். ஆக, மரியாவுக்கும் இயேசுவுக்கும் இடையிலான உறவு இரு நிலைகளில் உள்ளதைப் பார்க்கிறோம். ஒன்று, மரியாவுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவிய இரத்த உறவு, தாய்-சேய் உறவு. இரண்டு, இறைத்திட்டத்தை ஏற்றுச் செயல்படுத்துவதில் இயேசுவும் மரியாவும் நிலைத்திருந்ததால் அவர்களுக்கிடையே எழுந்த ஆன்மிக உறவு. நாமும் இந்த முறையில் இயேசுவோடு உறவினர் ஆகின்றோம். கடவுளின் பிள்ளைகள் என்னும் தகுதியைக் கடவுளே நமக்கு அளிக்கின்றார். ஆக, கடவுளின் குடும்பத்தினர் என்னும் முறையில் நாம் இறையுறவில் நாளும் வளர அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் விருப்பத்தை அறிந்து அதைச் செயல்படுத்திட எங்களுக்கு அருள்தாரும்.