யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2024-07-07

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம். 2: 2-5,பதிலுரைப்பாடல்: திபா. 123: 1-4,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம்: 12:7-10,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

“என் அருள் உனக்குப் போதும்” என்று நம்மை வரங்களால் நிரப்ப அழைப்பு விடுக்கும் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு திருப்பலிக்கு அழைக்கப்பட்டிருக்கும் அன்புள்ளங்களை அன்போடு வரவேற்கிறோம். “உன் வாழ்நாள்களை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்” என்று நம்மை ஆசீர்வதிக்கும் இறைவனை அனுபவிக்கவும், உணர்ந்து நம்பிக்கையில் ஆழப்படவும் இன்று அழைக்கப்பட்டிருக்கிறோம். அனைத்து நலன்களால் ஆசீர்வதிக்கப்படும்போது மனம் இறைவனை மறந்து இறுமாப்பு அடைகிறது. இறுமாப்பினை அழிக்கவே சிறு குறைகளை அவ்வப்போது இறைவன் தருகின்றார். குறைகளை நிறைவாக்க வலிமையையும் தருகின்றார். புனித பவுல் தனக்கு ஏற்பட்ட துன்பங்களிலும் அவமானங்களிலும் மனம் தளராது நிலைத்து நின்றதைக் காண்கிறோம். “வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன் என்கிறார் பவுல். நாமும் இறைவன் கரங்களைப் பற்றிக் கொண்டு இவ்வாழ்வை எதிர் நோக்குவோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில், இறைவன் இயேசு செய்த அற்புதங்களையும், ஞானத்தையும் கண்ணால் கண்டும், அனுபவித்தும் இருந்த மக்கள் அவரது பிறப்பை முன்னிட்டு, பிறந்த இடத்தை முன்னிட்டு அவரை ஏற்க மறுக்கின்றனர். இன்றைய சமூகத்திலும், பல்வேறு காரணங்களால், சிலரின் சூழ்ச்சிகளால், நல்லது செய்ய எண்ணுவோர் நசுக்கப்படுகின்றனர். பொது நலனில் அக்கறை கொண்டு உழைப்பவர்கள் கொல்லவும் படுகின்றனர். “மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; கடவுளோ அகத்தைப் பார்க்கின்றார்” என்ற இறை வசனத்தைக் கருத்தில் கொள்வோம். பிறரின் எதிர்மறையான சொற்களையும் எண்ணங்களையும் மனதிற் கொள்ளாமல், நலம் பயக்கும் செயல்களை செய்ய முன்வருவோம். “நற்செயல்கள் உன் குடும்பத்திற்காக செய்யப்படும் போது

ஒரு தலைமுறை உன்னை நன்றியோடு நினைவுகூரும்.

உன் நற்செயல்கள் உன் சமூகத்திற்காகச் செய்யப்படும் போது

ஓராயிரம் தலைமுறை உன்னை நினைத்து வாழ்த்தும்.”

வாழ்த்துக்கள் வந்தடையும் முன் வருத்தமடையச் செய்யும் வசவுகள் வந்து தான் தீரும். அவற்றை இறை நம்பிக்கையோடு எதிர் கொள்வோம். பிறர் நம்பிக்கையைத் தூண்டுவோம் என்ற சிந்தனைகளோடு இப்பலியில் இணைவோம்.



முதல் வாசகம்

தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம். 2: 2-5

அவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது: அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன். அவர் என்னிடம், "மானிடா! எனக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்றுவரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர் " என்றார். "வன்கண்ணும், கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம் போய், 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்று சொல். கலக வீட்டாராகிய அவர்கள், செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்."

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.
பதிலுரைப்பாடல்: திபா. 123: 1-4

விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியு ள்ளேன். பல்லவி:

பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப் பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல, எம் கடவு ளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியி ருக்கும். பல்லவி:

எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே! எங்களுக்கு இரங்கும்: அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம். இன்பத்தில் திளைத்திருப்போரின் வசை மொழி போதும். இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும். பல்லவி:

இரண்டாம் வாசகம்

நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம்: 12:7-10

எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள் போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப் போல் இருக்கிறது. நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், "என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் " என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது: ஏழைகளு க்கு நற்செய்தியை அறிவிக்க அவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6

அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ;இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? " என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் " என்றார்.அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

மகத்துவமிக்க இறைவா!

இன்றைய உலகில் உமது திருஅவை எதிர்கொள்கின்ற எதிர்ப்புக்களைச் சந்திக்க வேண்டிய ஆற்றலை, உமது பணியினைத் திறம்பட செய்து வருகின்ற சீடர்களுக்குக் கொடுத்தள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

வார்த்தையான இறைவா!

இறைவார்த்தையைக் கேட்கும் உமது மக்களின் உள்ளங்கள் பலன்தரும் நல்ல நிலமாக பக்குவமடையத் தேவையான வரமருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

அன்பேஉருவான இறைவா!

எங்கள் ஊரில் நாங்கள் மதிக்கப்படவும், உடன்பிறந்தவர்களோடு மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, அன்பு இவற்றால் ஒன்றித்து வாழவும் வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

நல்லாயனே இறைவா!

நாட்டில் இன்றும் உம்மையறியாது வாழ்கின்ற மக்களுக்காக மன்றாடுகிறோம். அவர்களுக்கு கிறிஸ்து வழங்கும் வாழ்வும், ஒளியும் நிறைவாகக் கொடுத்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

நம்பிக்கையின் உறைவிடமே இறைவா!

எங்களிடையே பரவிக் காணக்கிடக்கின்ற அவநம்பிக்கையை மாற்றி, கடவுள் நம்மோடு பயணம் செய்கிறார் என்ற உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டிய மனநிலையைத் தந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

இவர் தச்சர் அல்லவா”!

மாற்கு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடைக்கம் ஓர் அபூர்வமான செய்தி இது. பிற நற்செய்தியாளர்கள் இயேசு தச்சரின் மகன் என்பதைப் பதிவு செய்திருக்கும்போது, மாற்கு மட்டுமே இயேசுவும் ஒரு தச்சர் என்று எழுதியுள்ளார். இயேசு தன் முப்பதாவது வயதில் பணிவாழ்வைத் தொடங்கும் முன், தன் குடும்பத்தில் ஓர் உழைப்பாளியாக, தன் தந்தையின் தொழிலாகிய தச்சுத் தொழிலையே செய்து வந்தார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். மாற்கு அதனைப் பதிவு செய்துள்ளார். ஆம், இயேசு ஒரு தச்சர், உழைப்பாளி. உழைப்பின் மேன்மையை அனுபவமுறையில் அறிந்தவர்.

இந்தத் தகவல் நம் உள்ளங்களில் பல எண்ணங்களை மலரச் செய்கிறது. .

1. இறைவன் உழைப்பை மேன்மைப்படுத்துகிறார். நாம் உழைக்க வேண்டும். உழைக்காதவர் உண்ணலாகாது. .

2. எந்தத் தொழிலும் இழிவானது அல்ல. நேர்மையுடன் செய்யப்படும் எந்தத் தொழிலும் இறைவனுக்கு ஏற்றதே. .

3. ஒரு மனிதரை அவர் செய்யும் தொழிலைக் கொண்டு மதிப்பிட்டு, இழிவு படுத்தாமல், அவரது பண்புகள், இயல்புகளுக்காக அவரை மதிக்க வேண்டும். .

4. உழைப்பின் அருமையை உணர்ந்தவர்கள்தான் பிறரின் சுமைகளை உணர முடியும். சுமை சுமந்து சோர்ந்திருப்போர், வாருங்கள் என்று இறைப்பாறுதல் தரமுடியும். உழைப்பவர் மட்டுமே உழைக்கும் மக்களின் உணர்வுகளைப் புரிய முடியும். இன்றைய நாளில் உழைப்பாளிகள் பற்றிய நம் பார்வையை ஆழப்படுத்திக்கொள்வோம்.

மன்றாட்டு:

உழைப்பின் மாண்பை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் ஒரு தச்சராகப் பணி செய்து, உழைப்பவர் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர். நானும் பிறரின் உழைப்பை மதிக்கவும், உடல் உழைப்பில் ஈடுபடுவோர்மீது அக்கறை கொள்ளவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.