யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2024-07-28

(இன்றைய வாசகங்கள்: அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம். 4: 42-44,பல்லவி: ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.,திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 4: 1-6,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

வாழ்வுக்குரியவர்களே, பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இறைவன் நமக்கு மிகுதியாக தருகிறார் என்ற கருத்தை இன்றைய திருவழிபாடு நமக்கு முன்வைக்கிறது. மக்கள் மீது பரிவு கொண்டவராய் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்கிறார். நம் மேல் கனிவு காட்டும் இறைவன், நமது வாழ்வில் அற்புதங்களை செய்யவும் தயாராக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இறைவனின் செயல்பாட்டை நம் வாழ்வில் உணர, நாம் அன்போடும் தாழ்மையோடும் நம்மை அவரிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம். ஆண்டவரின் அருஞ்செயல்களை நமது வாழ்வில் காண வரம் வேண்டி, இந்த திருப்பலி யில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

இம்மக்கள் உண்ட பின்னும் மீதி இருக்கும்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம். 4: 42-44

பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, "மக்களுக்கு உண்ணக் கொடு" என்றார். அவருடைய பணியாளன்,"இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?" என்றான். அவரோ,"இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் 'உண்ட பின்னும் மீதி இருக்கும்' என்று ஆண்டவர் கூறுகிறார்" என்றார். அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பதிலுரைப்பாடல்: திபா. 145: 10-11, 15-18
பல்லவி: ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.

பல்லவி எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். பல்லவி

ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர் தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி

இரண்டாம் வாசகம்

ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; ஆண்டவரும் ஒருவரே; திருமுழுக்கு ஒன்றே.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 4: 1-6

ஆதலால் ஆண்டவர் பொருட்டு கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்: நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே: தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே: நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே: திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே: அவர் எல்லாருக்கும் மேலானவர்: எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்: எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15

இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு,"இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக,"இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா,"இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றார். இயேசு,"மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின்,"ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள்,"உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

இறைத்தந்தையே எம் இறைவா!

முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக நீர் செய்த அருள்செயல்களை நினைவுகூர்ந்து திருஅவையின் ஊழியர்கள் புதிய ஆற்றலோடு உமது பணியினை செய்ய வேண்டிய ஞானத்தை நிறைவாக பொழிய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

உணவாக வந்த தெய்வமே இறைவா!

பஞ்சம், பசி, பட்டினி காரணமாக அன்றாட தேவைகளுக்கு ஏங்கி தவிக்கும் மக்களுக்கு பகிர்ந்து வாழும் நல்ல மனதைத் தந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

அன்பின் ஊற்றாகிய இறைவா!

குடும்ப வாழ்க்கையில் வரும் சவால்களைக் கண்டு மனம் சோர்ந்து போகாமல் அவற்றை எதிர்கொள்ளும் மனதைத் தந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

வாழ்வளிக்கும் வள்ளலே இறைவா!

எங்கள் சுயவிருப்பங்களை உம்மீது திணிக்காமல், உமது விருப்பத்தை எங்கள் வாழ்வில் நிறைவேற்ற வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

ஒன்று சேர்க்கும் இறைவா!

நம்பிக்கையும் செயல்பாடும் இணையும் போதுதான் கிறிஸ்து நம்முள் வாழ்கிறார் என்பதை உணர்ந்து அதன்படி வாழ வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

வாழ்வளிப்பவராம் இறைவா,

போர்ச் சூழல், வறட்சி, இல்லாமை, இயலாமை போன்ற காரணங்களால் உணவின்றி வாடுவோருக்கும், அன்பின்மை, அமைதியின்மை, நலமின்மை போன்ற துன்பங்களால் வருந்துவோருக்கும் புதுவாழ்வு வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்'' (யோவான் 6:13)

அப்பம் பலுகிய நிகழ்ச்சிக்கும் நற்கருணையை இயேசு ஏற்படுத்தியதற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதையும் யோவான் காட்டுகிறார். ''இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், 'ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்' என்று தம் சீடரிடம் கூறினார்'' (யோவா 6:11-12) என்று யோவான் குறிப்பிடுகிறார். இங்கே இயேசு அப்பத்தை ''எடுத்தார்'' எனவும், கடவுளுக்கு ''நன்றிசெலுத்தினார்'' எனவும், ''பகிர்ந்தளித்தார்'' எனவும், மக்களுக்கு ''வேண்டிய மட்டும் இருந்தது'' எனவும், ''எஞ்சிய துண்டுகள் சேர்த்துவைக்கப்பட்டன'' எனவும் வருகின்ற சொற்றொடர்களை நாம் கருதலாம். இச்சொற்றொடர்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய பிற நற்செய்தி நூல்களில் இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்ச்சி தொடர்பாக வருகின்ற தகவல்களை உள்ளடக்கியவை என நாம் அறிகிறோம்.

உணவு உண்ணும்போது தட்டிலோ இலையிலோ மீதி வைக்கக் கூடாது எனவும் உணவை வீணடிக்கக் கூடாது எனவும் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுக்கொடுப்பர். ஆனால் இன்றும் பல இடங்களில் பலர் உணவைத் தூர எறிந்து வீணடிப்பது வழக்கமாயுள்ளது. இயேசு ஐயாயிரத்திற்கு மேலான மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவளித்தபின் ''பன்னிரு கூடை'' நிறைய அப்பம் எஞ்சியது. பன்னிரண்டு என்னும் எண் பன்னிரு குலங்களை உள்ளடக்கிய இஸ்ரயேல் மக்களைக் குறித்ததால் இங்கே எல்லா மக்களுக்கும் பயன்படும் வண்ணம் உணவு சேமிக்கப்படுவதை யோவான் குறிப்பிடுகிறார். எஞ்சியிருந்த அப்பம் ஏழைகளுக்கு உணவாக மாறும். நாம் உண்டோம், நிறைவடைந்தோம் என்றிராமல் பிறருடைய பசியை ஆற்றுவதற்கு நாம் அப்பத்தைச் சேர்க்க வேண்டும். கடவுள் தருகின்ற எந்தக் கொடையும் மக்களின் பயன்பாட்டுக்கு உரியதே ஒழிய வீணடிக்கப்படுவதற்கு அல்ல. இயேசு தம்மையே உணவாகத் தருகின்ற நற்கருணையும் இந்த உலகத்தின் பசியைப் போக்க நமக்குத் தூண்டுதலாக அமைய வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, மக்களின் பசியை ஆற்றிட நீர் வழங்கும் கொடைகளை நாங்கள் வீணடிக்காமல் பயன்படுத்த அருள்தாரும்.