திருவழிபாடு ஆண்டு - B 2018-08-19
(இன்றைய வாசகங்கள்:
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-6,திபா 34: 1-2. 9-10. 11-12. 13-14 ,திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 15-20,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58
)
திருப்பலி முன்னுரை
தந்தையாம் இறைவனின் அன்புமக்களாகிய உங்கள் அனைவருக்கும் ஆண்டின் பொதுக்காலம் 20 ஆம் வார ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் இவ்வேளையில் வாழ்த்துக்கூறி இந்நாளில் உங்களுக்கு இறையாசீர் பெருக வேண்டுகிறேன்.
ஞானத்துக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு இயேசுவின் திருவுடலையும், திரு இரத்தத்தையும் உண்டு நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. உலக பொருட்களில் பற்றுள்ளவர்களாய் வாழாமல், கடவுள் தரும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளும் ஞானமுடையவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் திகழ்ந்து, கடவுள் தருபவற்றில் நம்பிக்கை கொண்டு வாழ இயேசு நம்மை அழைக்கிறார். நாம் வாழ்வு பெறுவதற்காக, அவர் தன்னையே நமக்கு உணவாக தருகிறார். விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாகிய இயேசுவின் சதையாலும், இரத்தத்தாலும் ஊட்டம் பெற்று, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
நான் தரும் உணவை உண்ணுங்கள்; திராட்சை இரசத்தைப் பருகுங்கள்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-6
ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது. அது தன் பலி விலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது; தன் தோழிகளை அனுப்பி வைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின்று, ``அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்'' என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது; ``வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்து வைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்; பேதைமையை விட்டுவிடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்; உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்'' என்றது.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
திபா 34: 1-2. 9-10. 11-12. 13-14
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி
9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. 10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. பல்லவி
11 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். 12 வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? பல்லவி
13 அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு! 14 தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. பல்லவி
இரண்டாம் வாசகம் ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 15-20சகோதரர் சகோதரிகளே, உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள். இந்த நாள்கள் பொல்லாதவை.
ஆகவே காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்; ஆகவே அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள். திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும்.
மாறாக, தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள். உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். அல்லேலூயா.
அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.
நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?'' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
இயேசு அவர்களிடம், ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந் திருப்பேன்.
வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. ஞானத்தின் ஊற்றே இறைவா, உமது திருமகனின் சதையாலும் இரத்தத்தாலும் ஊட்டம் பெறும் திருச்சபையின் மக்கள் அனைவரையும், ஞானத்தோடும் விவேகத்தோடும் வழிநடத்தும் வலிமையை எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வின் தொடக்கமே இறைவா, உலகிற்கு வாழ்வளிப்பதற்காக விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த இயேசுவில் இந்த உலகம் முழுமையாக நம்பிக்கை கொள்ளவும், அதன் வழியாக நீர் அளிக்கும் நிலை வாழ்வை மக்கள் அனைவரும் பெற்று மகிழவும் உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நம்பிக்கை அளிப்பவராம் இறைவா, உலகெங்கும் புரிந்துகொள்தல், ஏற்றுக்கொள்தல், விட்டுக்கொடுத்தல், அன்புசெய்தல், அரவணைத்தல், பரிவுகாட்டுதல், நீதியை நிலைநாட்டுதல், பிறரை மதித்தல், உண்மைத் தேடுதல், அமைதி ஏற்படுத்துதல் போன்ற நன்மைகளுக்கு எதிரான நோய்களால் பாதிக் கப்பட்டுள்ள அனைவரையும் குணப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. எம்மை நிறைவடையச் செய்யும் தந்தையே இறைவா! உமது மக்களாகிய நாங்கள் அனைவரும், நீர் தந்த அருட்கொடைகளுக்காக நன்றி கூறி, எமது வாழ்வால் கிறிஸ்துவை மற்றவர்களுக்குக் காட்டி, ஒன்றிணைந்த சமூகமாக, அன்பியச் சமூகமாக வாழ் வாழ்ந்திட அருள் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. உயிரைச் சாவினின்று காக்கின்ற தந்தையே இறைவா! யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும், மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
6. எங்கள் அன்பு தந்தையே இறைவா! இன்றைய நவீன காலத்தில் உலகில் ஏற்படும் நவீன மாற்றத்திற்குத் தங்களையே இழந்துக் கலாச்சாரச் சீர்கேடுகள், சமூகத்திற்கு எதிரான தீய சிந்தனைகள் இளமையில் இறைபிரசன்னத்தை உணராமல் எதிர்கால வாழ்வை இழந்த எம் இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைப் பின்பற்றி வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு, 'எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர்,
நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்' என்றார்'' (யோவான் 6:56)
இயேசு மக்களுக்கு நிலைவாழ்வு தரும் உணவைத் தரப்போவதாகக் கூறியதும் அவர்கள் தமக்குள்ளே ''முணுமுணுத்தார்கள்'' (யோவா 6:41). ஆனால், அவர் வழங்கப்போகின்ற உணவு அவருடைய சொந்த ''சதையும் இரத்தமும்'' என்றதுமே மக்களிடையே வாக்குவாதமே எழுந்துவிட்டது! அவர்கள் ''நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்'' என்று வாதாடத் தொடங்கினர். இதைக் கண்ட இயேசு மக்களுக்கு இன்னும் அழுத்தமாகக் கூறிய உண்மை இது: ''எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்'' (யோவா 55). இவ்வாறு இயேசு கூறியதைக் கேட்ட மக்கள் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்திருப்பார்கள். அதாவது, எந்த மனிதரும் பிற மனிதரின் சதையை உண்பதை முறையானதாகக் கருத மாட்டார்கள். ஏன், இத்தகைய செயல் காட்டுமிராண்டித்தனமானது என்று கூடக் கூறுவார்கள். ஆனால் இயேசு கூறுகின்ற சொற்கள் உண்மையிலேயே அவர் தம்மை நமக்கு உணவாகவும் பானமாகவும் தருகின்ற கொடையைக் குறிக்கின்றன. என்றாலும் இயேசுவின் உடலை நாம் உண்ண முடியுமா, அவருடைய இரத்தத்தை நாம் குடிக்க இயலுமா எனச் சிலர் கேட்கலாம். இங்கே இயேசு கூறுவது நம் ஆன்ம உணவையும் பானத்தையும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அதே நேரத்தில், நாம் உட்கொள்கின்ற உணவும் அருந்துகின்ற தண்ணீரும் நாம் உயிர்வாழ நமக்குச் சக்தி தருவதுபோல, இயேசுவை நமது உணவாகவும் பானமாகவும் நாம் ஏற்றுக்கொண்டு, அவருடைய தன்மையை நமது தன்மையாக மாற்றிக்கொண்டால் நாம் ஆன்ம வாழ்வில் வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைவோம்.
நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது அப்பமும் இரசமும் இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாற்றம் பெறுகின்றன என்பது நம் நம்பிக்கை. இயேசுவே தம்மை நமக்குக் கொடையாக அளிக்கின்றார் என்பதே இதன் பொருள். தம்மையே கொடையாகத் தருகின்ற இயேசுவை நாம் ஏற்று, அவருடைய சக்தியிலிருந்து சக்தி பெற்று வாழ்ந்தால் அவருடைய வல்லமை நமக்கு ஊக்கமும் ஆக்கமும் தரும். இயேசுவிடம் துலங்கிய பண்புகள் நம்மிடமும் துலங்கும். அப்போது நம் வாழ்க்கை இயேசுவின் வாழ்க்கைக்கு ஒத்ததாகவும் உகந்ததாகவும் மாற்றம் பெறும். இயேசுவின் சதையை உண்டு. அவருடைய இரத்தத்தைக் குடிக்கும் நாம் ஒருவிதத்தில் இயேசுவின் தன்மையைப் பெறுவதால் அவர் எல்லா மனிதரையும் அன்புசெய்து அவர்களின் நலனுக்காகத் தம்மையே பலியாக்கியதுபோல நாமும் தன்னலம் களைந்து பிறர்நலம் பேணுவதில் நிலைத்திருப்போம்; நிலைவாழ்வு பெற்று மகிழ்வோம்.
மன்றாட்டு:
இறைவா, எங்கள் வாழ்க்கையை இயேசுவின் வாழ்க்கையோடு இணைத்திட அருள்தாரும்.
|